பக்கம்:கண் திறக்குமா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

11

போச்சு!” என்று திருப்பிக் கேட்டேன். நான் விழித்துக் கொண்டதை அறிந்து அவர்களும் விழித்துக்கொண்டார்கள் - அப்புறம் கேட்க வேண்டுமா? - என்னையும் அவர்கள் கட்சியில் சேர்த்துக் கொண்டார்கள்; நானும் அவர்களுடைய கட்சியில் சேர்ந்துகொண்டுவிட்டேன்.

அடி சக்கை! அப்புறம் கொள்ளையோ கொள்ளைதான்! அதுவும் எப்படிப்பட்ட கொள்ளை? கெளரவமான கொள்ளை! மாலை மரியாதையோடு வரவேற்றுக் கொடுக்கும் கொள்ளை! சட்டம் ஒன்றும் செய்ய முடியாத கொள்ளை! இந்த உலகத்தில் என்னென்ன இன்பங்கள் உண்டோ, அத்தனையையும் என் வாழ்நாளிலேயே நான் அனுபவிப்பதற்கு வேண்டிய வசதியளிக்கக்கூடிய கொள்ளை! தகுதியில்லாமல் கிடைத்துக் காரணமில்லாமல் போய்விடும் பெயரும் புகழும் என்னைத் தேடி வரும் கொள்ளை! தன்னலத் தியாகியென்றும், தர்மகர்த்தா வென்றும், கொடையில் கர்ணனென்றும், இல்லாத பாரத மாதாவின் பிறக்காத அருந்தவப் புதல்வன் என்றும், ஏழைப்பங்காளன் என்றும், இன்னும் எத்தனை எத்தனையோ விதமாக என்னைப் பாராட்டிச் சீராட்டிப் பகிரங்கமாகக் கொடுக்கும் கொள்ளை!

இப்படிப்பட்ட சொர்க்க போகத்துக்கு நடுவே ஏழை மக்களைப் பற்றி, என்னைப்போன்ற நயவஞ்சகச் சிகாமணிகளுக்கு உயிரையும் உடலையும் அர்ப்பணம் செய்வதன் மூலம் கண்கண்ட கடவுள்களாக விளங்கும் உண்மையான தியாகசிகரங்களைப் பற்றி, இதுவரை நான் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை; சொல்ல விரும்பவுமில்லை. ஏனெனில், அப்படி ஏதாவது சொல்லியிருந்தால் நான் விரும்பிய வண்ணம் இந்த உலகத்தில் வாழ்ந்திருக்க முடியாது; மறு உலகத்திலும் நிச்சயமாக வாழ்ந்திருக்க மாட்டேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/14&oldid=1379251" இலிருந்து மீள்விக்கப்பட்டது