பக்கம்:கண் திறக்குமா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

கண் திறக்குமா?

ஆனால், நேற்றுவரை தான் மேற்கூறிய நிலையில் நான் இருக்கவேண்டியிருந்தது; இன்று அந்த நிலையில் இல்லை. “இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் நீங்கள் உயிர் வாழ்ந்திருக்க முடியாது” என்று என்னுடைய வற்புறுத்தலின் பேரில் இத்தனைநாளும் எனக்குச் சிகிச்சை அளித்துவந்த டாக்டர் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். எனவே, பொது ஜனங்களிடமிருந்து பறித்த சொத்தை நான் பொது ஜனங்களின் உபயோகத்துக்கென்றே உயில் எழுதி வைத்துவிட்டேன். அதன் பயனாகச் சாகும்பொழுதும் நான் புகழுடனேயே சாகப் போகிறேன் - அதாவது, யாரிடமிருந்து கொள்ளையடித்தேனோ, அந்தப் பணத்தை அவர்களுக்கே திருப்பிக் கொடுத்ததற்காக - போகட்டும்!

நான் சாவதற்கு முன்னால் என்னுடைய கதையை உங்களிடம் சொல்லிவிட வேண்டுமென்று என் உள்ளம் ஏனோ துடிக்கிறது. அப்படிச் சொல்லாவிட்டால், சாவில் கூட நான் அமைதியைக் காணமாட்டேன் என்று என் உள்ளுணர்ச்சிகளில் ஏதோ ஒன்று கூறுகிறது. என்னுடைய கதையைக் கேட்ட பிறகு சிலர் ஆத்திரம் அடையலாம்; சிலர் அனுதாபம் காட்டலாம். ஆனால் தயவு செய்து யாரும் என்னை மன்னித்துவிட்டு, உடனே மனச் சாந்தி யடைந்துவிட வேண்டாம் என்று தலைவணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு செய்வது பெருந்தன்மையுமல்ல, தமிழர் பண்புமல்ல - உங்கள் சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கச் செய்யும் ரகசியம், சுயநலக்காரர்களின் சூழ்ச்சி; ஏய்க்கும் கூட்டத்தாரின் ஏமாற்று வித்தை!

அத்தகைய மனப்பான்மை உங்களை ஒருநாளும் வாழ வைக்காது; சாகத்தான் வைக்கும். அதிலும், என்னைப் போன்ற சாகப்போகிறவர்களை வேண்டுமானால் நீங்கள் மன்னித்து விடலாம்; உயிரோடிருப்பவர்களை ஒருநாளும் மன்னிக்கவே கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/15&oldid=1379253" இலிருந்து மீள்விக்கப்பட்டது