பக்கம்:கண் திறக்குமா.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

149

கண்ணால் அவரைக் கவனித்தேன். அவர் வாலிபராயிருந்தார். அத்துடன் அவர் அணிந்திருந்த வேட்டி, சட்டை, அங்கவஸ்திரமெல்லாம் கதர் மயமாக இருக்கவே, என் அச்சம் அதிகரித்தது. ஏனெனில் சிவகுமாரனும் கதர் தான் அணிவது வழக்கம் ! இருந்தாலும், 'மீசைக் காரனிடமிருந்து தப்பிப் பிழைத்தோமே!' என்ற ஆறுதலுடன் ஒரு பெருமூச்சு விட்டேன். 'இந்நேரத்தில் தனியாகக் கிளம்பி வரலாமா? என்றார் அவர். வேறு வழியின்றி நான் என்னுடைய கதையைச் சொன்னேன். அதைக் கேட்டு அவர் உருகினார். 'இதில் ஒன்றும் அதிசயமில்லை!' என்று நான் எண்ணிக்கொண்டேன்.

ஏனெனில் பெண் என்றால் பேயும் இரங்குமல்லவா? அப்படியிருக்கும்போது அவர் இரங்கியதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? அடுத்தாற்போல, 'நீங்கள் எங்கே போகவேண்டும்!' என்றார். 'சென்னைக்கு' என்றேன். 'நானும் அங்குதான் போகிறேன்' என்றார். 'சந்தோஷம்' என்றேன், அப்போதும் நான் அவரை நம்பாமல். அதற்கேற்றாற்போல் ஸ்டேஷனை அடைந்ததும் எனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்தார் அவர்; நான் 'வேண்டாம்' என்று சொல்லவில்லை. காரணம், அந்தச் சமயம் என் கையில் ஒரு காலணாக்கூட இல்லாமலிருந்ததுதான். எனினும் சும்மா இருந்து விடவில்லை நான்; கையிலிருந்த வளையல்களில் ஒன்றைக் கழற்றிக் கொடுத்து, "இதை எங்கேயாவது விற்று டிக்கெட்டுக்குரிய காசை எடுத்துக் கொள்ளுங்கள்!" என்றேன். 'அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்' என்று சொல்லிக்கொண்டே, அவர் பத்து ரூபாய் நோட்டொன்றை எடுத்து நீட்டினார். 'அடடா! என்ன தாராளம், என்ன தாராளம்!' என்று நான் நினைத்துக் கொண்டேன். அத்துடன், நாமே ஓர் ஆண் பிள்ளையாயிருந்தால் அவர் அப்படியெல்லாம் உதவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/152&oldid=1378894" இலிருந்து மீள்விக்கப்பட்டது