பக்கம்:கண் திறக்குமா.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

153

"இனிமேல் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது? எல்லாம் முடிந்தாற்போலத்தான்!" என்றேன் நான்.

இவற்றையெல்லாம் மலர்ந்த முகத்துடன் கவனித்துக் கொண்டிருந்த செங்கமலத்தின் தாயார், "இந்த வேடிக்கை விளையாட்டெல்லாம் கல்யாணமாவதற்கு முன்னால்தான். அப்புறம் பார்க்கவேண்டுமே, என்னதான் ஆசையோடு கல்யாணம் செய்து கொண்ட அகமுடையான் பெண் டாட்டியாயிருந்தாலும் எலியும் பூனையுமாகி விடுவார்கள்!" என்றாள்.

"அதெல்லாம் 'பெரியோர் நிச்சயித்த வண்ணம்' நடக்கிறதே, அந்தக் கல்யாணத் தம்பதிகளிடந்தான் பார்க்க முடியும்!" என்றேன் நான்.

"ஏன், 'சிறியோர் நிச்சயித்த வண்ணம்' நடக்கிறதே, அந்தக் கல்யாணத் தம்பதிகளிடம் மட்டும் பார்க்க முடியாதோ!" என்றாள் அவள்.

"அவசியம் பார்க்கலாம்!" என்று அவள் சொன்னதை அப்படியே ஆமோதித்தாள் சித்ரா.

"தவறு; உண்மையாகவே ஒருவரையொருவர் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவர்களாயிருந்தால் ஒருநாளும் அவர்கள் எலியும் பூனையுமாக இருக்க மாட்டார்கள்; மலரும் மணமுமாகவே இருப்பார்கள்!" என்றாள் சாந்தினி.

"கல்யாணமாவதற்கு முன்னால் அப்படித்தான் சொல்லத் தோன்றும்; அதற்குப் பிறகுதானே தெரியும் அந்தக் கஷ்டமெல்லாம்?" என்றாள் செங்கமலத்தின் தாயார், அப்பொழுதும் விடாமல்.

"கஷ்டம் இருக்கலாம்; ஆனால் அதிலும் ஓரளவு சுகம் இருக்கும். துன்பம் இருக்கலாம்; ஆனால் அதிலும் ஓரளவு இன்பம் இருக்கும்!" என்றாள் சாந்தினி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/156&oldid=1378888" இலிருந்து மீள்விக்கப்பட்டது