பக்கம்:கண் திறக்குமா.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

165


இல்லையென்றால் சர்க்காரோ அதிகாரிகளோ காரணம் என்று சொல்லிவிடவேண்டும். அதிலும் இப்போது வெள்ளைக்காரர் சர்க்கார் நடக்கிறதல்லவா? - எதற்கு வேண்டுமானாலும் அவர்களைத் திட்டலாம்; தப்பித் தவறிச் சுயராஜ்யம் வந்து விட்டால்தான் கொஞ்சம் சங்கடமாயிருக்கும். அப்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி அப்புறம் யோசித்துக் கொள்ளலாம். உம்மிடந்தான் ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேனே - இந்த ஜனநாயகம், சுதந்திரம் என்பதெல்லாம் ஒரு சிலர் பேரும் புகழும் அடைவதற்கும், பட்டமும் பதவியும் பெறுவதற்குத்தான் உபயோகமாயிருக்குமே தவிர மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டுவனவாயிருக்காதென்று! - எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் இந்த அரசியல் என்பதே வெறும் பித்தலாட்டந்தான்.

மக்கள் உண்மையிலேயே நல்வாழ்வு பெற விரும்பினால் தங்களைத் தாங்களே நம்ப வேண்டுமே தவிர வேறு எதையுமே, எவரையுமே நம்பக் கூடாது. நாமும் அப்படித்தான்; நம்முடைய நல்வாழ்வுக்கு நம்மை நாமே நம்ப வேண்டும். அப்படி நம்பிக்கொண்டு ஏழைகளைப்பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம்; என்ன வேண்டுமானாலும் எழுதலாம் - எதைப் பற்றிப் பேசினாலும் சரி, எதைப் பற்றி எழுதினாலும் சரி - கருமத்தில் மட்டும் கண்ணாயிருக்க வேண்டும். அந்தக் கருமந்தான் பணத்தையும் பதவியையும் தேடுவது; பேரையும் புகழையும் நாடுவது. இவற்றை நேரான முறையில் அடைவது முடியாத காரியம். எனவே, பித்தலாட்டம் செய்வதில்தான் அவற்றைச் சுலபமாக அடைய முடியும். ஆனால் அதைப் பித்தலாட்டம் என்று சொன்னால் அவ்வளவு நன்றாயிராதல்லவா? அதற்காகத் தான் அதை 'ராஜதந்திரம்' என்று சொல்வது; அந்த ராஜதந்திரத்தை நீரும் கடைப்பிடிக்கலாமே?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/168&oldid=1378827" இலிருந்து மீள்விக்கப்பட்டது