பக்கம்:கண் திறக்குமா.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


17. கண்ணன் வந்தான்!

நானும் பார்த்திருக்கிறேன்; நீங்களும் பார்த்திருக்கலாம் - சில சமயம் நமக்குப் படித்தவர்களைவிட, பாமரர்கள் பகுத்தறிவுள்ளவர்களாகத் தோன்றுகிறார்கள். தீர்க்க தரிசனத்துக்குப் பெரிய பெரிய ராஜதந்திரிகள்கூட அவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும் போலிருக்கிறது. கண்ணனைப் பற்றி அவனுடைய தாயாரும் தந்தையும் தங்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிவித்தபோது எனக்கு அப்படித்தான் தோன்றிற்று.

ஆம், பெற்றெடுத்த பிள்ளை அவர்களுக்குப் பிடிக்கவில்லை; அவனை மாலையிட முன்வந்த பெண்ணைத் தான் அவர்களுக்குப் பிடித்திருந்தது. இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை; பிடித்திராவிட்டால்தான் ஆச்சரியமாயிருந்திருக்கும் ஏனெனில் வெளி அழகோடு உள்ளழகும் சித்ராவிடம் பொருந்தியிருந்தது. ஆசைக் கனவுகள் பல கண்டு, ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்க வேண்டிய அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே அவள் போதுமான அளவுக்குப் பிரபஞ்ச ஞானம் பெற்றிருந்தாள். முக்கியமாகக் காதலைப் பற்றி அவள் கொண்டிருந்த அபிப்பிராயம் இலக்கியத்துக்கு ஒத்ததாயில்லாமல் இருந்தாலும் வாழ்க்கைக்கு ஒத்ததாயிருந்தது. அனுபவமில்லாமலே அந்த விஷயத்தில் தன் அறிவைக் கொண்டு அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தது எனக்கு வியப்பாயிருந்தாலும் விரும்பத்தக்கதாயிருந்தது. அதைப் பற்றி அவளைப் பார்க்க வந்திருந்தவர்களிடம் அன்று நான் வேடிக்கையாகத் தெரிவித்தேன். அவர்களும் அதை வெகுவாக அனுபவித்து அவளைப் பெரிதும் பாராட்டினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/173&oldid=1379599" இலிருந்து மீள்விக்கப்பட்டது