பக்கம்:கண் திறக்குமா.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

173

னொரு முறை என்ன, எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்வேன். வீடு வாசலைப் பார்த்துக் கொள்ளாமல், பயிர் பச்சையைக் கவனித்துக் கொள்ளாமல் கட்சி என்ன வேண்டிக் கிடக்கிறது, கட்சி? ஒருவன் தலைவனாயிருக்க ஓராயிரம் பேரையாவது தொண்டர்களாக்குவது தானே கட்சி?" என்று மேலே ஏதேதோ சொல்ல ஆரம்பித்து விட்டாள் அவள்.

"நன்றாய்ச் சொன்னீர்கள், நன்றாய்ச் சொன்னீர்கள்! இவர்கள் தான் சமதர்மத்தைப் பற்றிப் பேசுகிறார்களம்மா. இவர்கள் தான் சமதர்மத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்!" என்றார் பரந்தாமனார்.

"அதுமட்டுமா? கொல்லைக்குத் தொல்லை கொடுக்கிறது என்பதற்காகக் குரங்கினத்தையே அழித்துவிட வேண்டும் என்று சொல்பவன் அஹிம்ஸையைப் பற்றிப் பேசுகிறான்; 'எல்லார்க்கும் நல்லவன்' என்று பெயரெடுப்பதற்காக எடுத்ததற்கெல்லாம் பொய் சொல்பவன் சத்தியத்தைப் பற்றிப் பேசுகிறான் - இதெல்லாம் வேடிக்கையாயில்லையா?"

"வேடிக்கைதான், வேடிக்கைதான்; வேண்டுமானால் அதைப் பற்றி அழகாகப் புத்தகம் எழுதி, அழகாக அச்சிட்டு, அழகாக வியாபாரம் செய்யலாமே?" "அதையும் சொல்லிப் பார்த்தேன்; கேட்டால் தானே? 'சோறு, சோறு' என்று அடித்துக் கொள்பவர்களிடம் போய், 'தேசம், தேசம்' என்கிறான்; 'வேலை, வேலை, என்று அடித்துக் கொள்பவர்களிடம் போய் 'விடுதலை விடுதலை' என்கிறான்; 'கட்டத் துணி இல்லையே? என்று கதறுபவர்களிடம் போய், 'கதரை வாங்கிக் கட்ட வில்லையே!' என்கிறான்; 'வாங்கக் காசில்லையே!' என்று வாடுபவர்களிடம் போய், 'வருகிறது சுதந்திரம்!' என்கிறான். இப்படிப்பட்டவனைக் கட்டிக்கொண்டு அவள் என்னதான் செய்யப்போகிறாளோ, அதுதான் எனக்குத் தெரியவில்லை!" என்றாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/176&oldid=1379256" இலிருந்து மீள்விக்கப்பட்டது