பக்கம்:கண் திறக்குமா.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

175


கொள்வதோடு நான் நின்றுவிடவில்லை; தீனபந்து என்றால் நான், நான் என்றால் தீனபந்து என்று சொல்லும் அளவுக்கு அதற்காக அல்லும் பகலும் அனவரதமும் உழைத்தேன். வாசகர்களின் ஆரம்ப உற்சாகத்தை நம்பி, என் அறிவை நான் அவர்களிடம் அடகு வைத்தேன்.

ஒரு நாட்டின் வளத்துக்கு வாணிபம் அவசியம்; அந்த நாடு தன்னைக் காத்துக்கொள்வதற்கு ராணுவமும் அவசியம். இதை யாரும் மறுக்க மாட்டார்கள். இந்த இரண்டு விஷயங்களிலும் விசேஷமாகக் கவனம் செலுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அந்த அரசாங்கம் எந்தக் கட்சியின் நிர்வாகத்தில் இருந்தாலும் சரி; மேற்கூறிய இரண்டிலும் அவர்கள் கவனம் செலுத்தக் கடமைப்பட்டவர்களாகிறார்கள். அவ்வாறு கவனம் செலுத்தும் போது அவர்கள் வியாபார விஷயத்தில் சத்தியமாகச் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியாது; அப்படியே ராணுவத்தின் விஷயத்திலும் அஹிம்சையைக் கடைப் பிடிக்க முடியாது. 'முடியும்' என்றால் அது அரசியல் பித்தலாட்டமாகும்; பொதுமக்களை ஏமாற்றுவதாகும்; கேட்பவர்கள் நகைக்கக் கூடியதாகும்.

இந்த உண்மையை இன்று நான் உணர்கிறேன். ஆனால் அன்றோ? அவ்வாறு உணர்ந்து சொன்ன திரு.வ.உ.சி., வாஞ்சி போன்ற ஓரிரு தீர்க்கதரிசிகளை நான் வெறுத்தேன்; சத்தியத்திலும் அஹிம்ஸையிலும் பெரிதும் நம்பிக்கை வைத்தேன். வாழ்க்கையில் மட்டுமல்ல, அரசியலிலும் அவற்றைக் கடைப்பிடிக்கலாம் என்று மனமாரப் பொய் சொன்னேன்; அவற்றையே என்னுடைய பத்திரிகையின் தர்மமாகவும் கொண்டேன்.

அதற்குப் பின் கேட்க வேண்டுமா? 'எடு, ஜாமீன்!' என்றால், 'இதோ ஜாமீன்!' என்று எடுத்துக் கொடுத்தேன்; 'பிடி வாரண்ட்!' என்றால், 'எங்கே போலீஸ் லாரி?' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/178&oldid=1378771" இலிருந்து மீள்விக்கப்பட்டது