பக்கம்:கண் திறக்குமா.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

177

நேர்ந்தது; அவர்களுடைய தயவில் கிடைத்தபோது உண்பதும், நினைத்தபோது உறங்குவதுமாகக் காலத்தைக் கழிக்க வேண்டியிருந்தது.

பாரிஸ்டர் பரந்தாமனிடம் சென்று உதவி கோரவும் என்னுடைய சுயமரியாதை இடங்கொடுக்கவில்லை; சித்ராவிடமும் சாந்தினியிடமும் என்னுடைய நிலையைப் பற்றி சொல்லிக்கொள்ளவே நான் விரும்பவில்லை. 'இந்தக்' கஷ்டமெல்லாம் தேசம் விடுதலையடையும் வரைதானே? என்று சகித்துக் கொண்டு, அடுத்தடுத்து நடந்து வந்த ஜவுளிக்கடை மறியல், கள்ளுக்கடை மறியல் ஆகியவற்றிலெல்லாம் நான் கலந்து கொண்டேன். ஆயினும் எதிர்பார்த்ததற்கு விரோதமாக அரசாங்கத்தார் என் மண்டையை உடைத்து ஆஸ்பத்திரிக்குத்தான் அனுப்பினார்களே தவிர, சிறைக்கு அனுப்பவில்லை!

இதனால் என்னைப் போன்றவர்களுடைய உணர்ச்சி குன்றிவிடுமென்று எதிர்பார்த்த அதிகார வர்க்கம் கடைசியில் ஏமாற்றமடைந்தது. அதற்குப் பதிலாகத் காந்திஜியின் சரித்திரப் பிரசித்தி பெற்ற சட்ட மறுப்பு இயக்கத்தின்போது அது உச்ச நிலையை அடைந்தது. வடக்கே காந்திஜியின் தண்டியாத்திரை; தெற்கே ராஜாஜியின் வேதாரண்ய யாத்திரை, இந்த இரண்டு போராட்டங்களிலும் மக்களின் உணர்ச்சி கட்டுக்கடங்காமற் போய் விடவே, பிரிட்டிஷ் சர்க்காரின் அடக்கு முறை தலை விரித்தாடியது.

இந்த நிலையில் ஒரு நாள் சென்னை தினசரியொன்றில் நான் குற்றாலலிங்கத்தின் பெயரைக் கண்டேன். ஆச்சரியம் தாங்கவில்லை எனக்கு; விஷயம் என்னவென்று பார்த்தேன். வேதாரண்யத்திற்குச் செல்லும் தொண்டர்களுக்கு வேண்டிய வசதிகளை அவர் செய்து கொடுப்பதாக அதில் குறிப்பிட்டிருந்தது. ஒரு வேளை அவருடைய பெயரைக் கொண்ட வேறு யாராவது அவ்வாறு செய்கிறார்களோ என்று எண்ணி, அவருக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/180&oldid=1378768" இலிருந்து மீள்விக்கப்பட்டது