பக்கம்:கண் திறக்குமா.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

கண் திறக்குமா?

"சந்தேகமென்ன, நாமும் காங்கிரஸ்காரர்களாதலால் அதைப்பற்றிப் பத்திரிகைகளில் எழுத முடியாமலும் பொதுக் கூட்டங்களில் பேசமுடியாமலும் இருக்கிறோம்!" என்றார் அவர் அப்பொழுதும் விடாமல்.

"தலைவர் களைப் பற்றி நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்!" என்றேன் நானும் விடாமல்.

"நீர்தான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்! உண்மையைச் சொல்லப்போனால் நம்முடைய தலைவர்கள் பொது ஜனத் தலைவர்களே அல்ல - ஏன் தெரியுமா? - அவர்களில் பெரும்பாலோர் பிறவித் தலைவர்கள்; பரம்பரை பரம்பரையாகப் பணத்திலே ஊறித் திளைத்தவர்கள்; சுகபோகத்தின் எல்லையையும் இறுதியையும் கண்டவர்கள்; அவர்களுக்கும் ஜனங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது - கை தட்டுவதைத் தவிர!"

"என்ன! மகாத்மா காந்தியைக் கூடவா நீங்கள் அப்படிப்பட்டவர் என்கிறீர்கள்?"

"அவரை எப்படி அரசியல் தலைவர் என்று சொல்ல முடியும்? அரசியல் சந்நியாசி என்று வேண்டுமானால் சொல்லலாம்!"

"அப்படித்தான் இருக்கட்டுமே! அரசியல் தலைவர் களால் சாதிக்க முடியாத காரியத்தை அரசியல் சந்நியாசிகளால் சாதிக்க முடியும் என்று நான் சொல்கிறேன்!"

"சொல்லும் சொல்லும். ஆனால் நான் மட்டும் சொல்லத் தயாராயில்லை; ஏனெனில் அவர் அஹிம்ஸா வாதி!"

"அஹிம்ஸை வெற்றியடைய முடியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நம் கண்ணுக்கு முன்னாலேயே அது எத்தனையோ வெற்றிகளை அடைந்திருக்கிறதே!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/189&oldid=1379203" இலிருந்து மீள்விக்கப்பட்டது