பக்கம்:கண் திறக்குமா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

கண் திறக்குமா?

“எந்தப் புண்ணியவான் வருவானோ, எந்தப் புண்ணியவதி வருவாளோ?” என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்ட வண்ணம் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பார்கள்.

இதற்கு மத்தியில் “அவர் இருந்திருந்தால் எனக்கு இந்தக் கவலையே இருந்திருக்காது!” என்று அக்கம் பக்கத்தில் சொல்லி, நீர் மல்கும் கண்களை அடிக்கடி முந்தாணையால் துடைத்துவிட்டுக் கொள்வார்கள்.

இருந்தாற்போலிருந்து என் தாயாரின் கவலை சில சமயம் உச்ச நிலையை அடைந்துவிடும். அம்மாதிரி சமயங்களில் அவர்களுடைய பக்திக்கு எத்தனையோ நாட்களாகப் பாத்திரமாகியிருந்த பகவானின் தலைகட்ட உருளுவதுண்டு. “பாழும் தெய்வந்தான் சதி செய்து விட்டதே! உலகத்தில் அவரைவிட வயதானவர்களெல்லாம் இன்னும் உயிரோடு இருக்கவில்லையா?” என்று அங்கலாய்த்துக் கொள்வார்கள்.

ஒருநாள் அவ்வாறு அங்கலாய்த்துக்கொண்டபோது, “ஆமாம், அம்மா! அப்பா இறந்த பிறகு அவரைவிட வயதானவர்களெல்லாம் இந்த உலகத்தில் ஏன் இன்னும் இருக்கிறார்கள் என்று எனக்குக்கூடத் தெரியவில்லை!” என்றாள் தங்கை சிரித்துக்கொண்டே.

“அட, பாவமே! அவர்களெல்லாம் அப்பாவைப் பின்பற்றி இருக்கவேண்டுமா, என்ன?” என்றேன், நான்.

‘அதற்குச் சொல்லவில்லை, நான். அவர்களைப்போல உங்கள் அப்பாவும் இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருக்கக் கூடாதா, என்றுதான் சொல்கிறேன்!”

“அதை இப்போது சொல்லி என்ன அம்மா பிரயோசனம்? அப்பா இருக்கும்போது சொல்லியிருந்தால் ஒரு வேளை அவர் இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டுப் போயிருக்கலாம்!” என்றாள் சித்ரா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/19&oldid=1379260" இலிருந்து மீள்விக்கப்பட்டது