பக்கம்:கண் திறக்குமா.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

187

"ஆமாம், மகாத்மா காந்திக்கு முன்னால் இயேசுவும் புத்தருங்கூட அஹிம்ஸையில் வெற்றியடைந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய வெற்றியெல்லாம் ஆரம்ப வெற்றியாகத்தான் இருந்திருக்கிறது, என்பதை நீர் மறந்துவிடக் கூடாது!"

"ஏன், இன்றளவும் அவர்களுடைய பெயர் நிலைத்துத் தானே இருக்கிறது?"

"பெயர் நிலைத்துத்தான் இருக்கிறது: கொள்கை நிலைக்கவில்லை?"

"அதற்கு அவர்கள் என்ன செய்வார்கள்? மக்கள் அவர்களைக் கடவுள்களாக்கி விட்டதோடு நின்று விட்டார்கள்!"

"அதையேதான் நானும் சொல்கிறேன்; மகாத்மா காந்தியைக்கூட இன்னுங் கொஞ்ச நாட்களுக்கெல்லாம் மக்கள் கடவுளுடைய ஜாபிதாவில் சேர்த்துவிட்டு வழக்கம் போல் தங்கள் காரியத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்!"

"அதனால் அவருக்கென்ன நஷ்டம்? மக்களுக்கல்லவா நஷ்டம்?"

இந்தச் சமயத்தில் சாந்தினி இடைமறித்து, "அந்த நஷ்டம் ஒரு பக்கம் இருக்கட்டும்; இப்போது எனக்கு நேரம் நஷ்டமாகிக்கொண்டே இருக்கிறதே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்?" என்றாள்.

"இப்போதெல்லாம் என்னுடன் பேசினால் உனக்கு நேரம் நஷ்டமாவதுபோல்தான் இருக்கும்; நான் வேண்டுமானால் வெளியே போய்விடட்டுமா?" என்றார் பாரிஸ்டர் பரந்தாமன்.

"நீங்கள் போனால் நானும் போய்விடுவேன்!" என்றாள் சாந்தினி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/190&oldid=1378738" இலிருந்து மீள்விக்கப்பட்டது