பக்கம்:கண் திறக்குமா.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

கண் திறக்குமா?

காட்டுகிறது; இதன் காரணமாக அறிவும் ஒழுக்கமும் உள்ளவர்கள், நாணயமும் யோக்கியதையும் மிக்கவர்கள் தங்கள் காலமெல்லாம் வருந்தி வருந்தி அணுவணுவாகச் சாக வேண்டியிருக்கிறது!

இத்தகைய வருத்தத்துக்கு நாளடைவில் நானும் ஆளானேன். ஆனால் என்னை அணுவணுவாகக்கொன்று விடக்கூடிய சக்தியை அந்த வருத்தத்துக்குச் சாந்தினி அளிக்கவில்லை - ஆம், மந்திரி குமாரியான பிறகும் அவள் அளிக்கவில்லை. அவளுடைய இனிய பேச்சும் இதயத்தை மலரவைக்கும் சிரிப்பும் என்னுடைய வருத்தத்தைப் போக்கி வாழ்க்கையில் ஒரளவு மகிழ்ச்சியும் எதிர்காலத்தில் ஒரளவு நம்பிக்கையும் கொள்ள வைத்தன. அதற்கேற்றாற்போல் திரு. பரந்தாமனார் கனம் பரந்தாமனாரான பிறகும் என்னைப் பொறுத்தவரை திரு. பரந்தாமனாராகவே இருந்தது வரவேற்கக் கூடியதாயிருந்தது.

ஆயினும், இப்பொழுதெல்லாம் அவரை வீட்டில் அடிக்கடி பார்க்க முடிவதில்லை. அவரை மட்டுமென்ன, அவருடைய இளையாளையும் பார்க்கமுடிவதில்லை. காரணம், தேசத் தொண்டு அவர்கள் இருவரையும் சேர்த்து இழுத்ததுதான்!

முக்கியமாக, நகரத்துப் பிரமுகர்கள் அடிக்கடி நடத்தும் தேநீர் விருந்துகளுக்கு அவர்கள் அவசியம் செல்ல வேண்டியிருந்தது - பார்க்கப்போனால் கனம் பரந்தாமனாரைப் போன்றவர்களுக்கு அதுதானே தேசத்தொண்டு? - அன்றும் அப்படித்தான் நடந்தது. வழக்கம் போல் பாரிஸ்டர் பரந்தாமனைக் காணாமல் ‘காந்தி பவன'த்தை விட்டு நான் வெளியேறினேன். அப்போது வாசலில் கார் வந்து நின்றது. ஆனால் பரந்தாமனார் அதிலிருந்து இறங்கவில்லை; சாந்தினிதான் இறங்கினாள்.

“எங்கே அப்பாவைக் காணோம்?" என்றேன் நான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/195&oldid=1379001" இலிருந்து மீள்விக்கப்பட்டது