பக்கம்:கண் திறக்குமா.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

193

"கொஞ்சம் பொறுங்கள் சொல்கிறேன்!" என்று ஓடோடியும் சென்று காலண்டரைப் பார்த்துவிட்டு வந்து, "இன்று ஹோட்டல் டிலக்ஸில் அவருக்குத் தேநீர் விருந்து!" என்றாள் அவள்.

"சரி, வந்தால் சொல், நான் வந்து போனதாக!" என்று திரும்பினேன்.

"அதற்குள் என்ன அவசரம்? உட்காருங்கள்; இதோ வந்துவிடுகிறேன்!" என்று சொல்லிவிட்டு அடுக்களைக்குச் சென்றவள், அடுத்த நிமிஷம் இரண்டு கைகளிலும் இரண்டு 'கப்' தேநீருடன் வந்து எனக்கு எதிரே உட்கார்ந்தாள்.

"இந்நேரத்தில் எனக்கு டீ எதற்காம்?" என்றேன் நான்.

"பரவாயில்லை, சாப்பிடுங்கள்! நம்மைக் கூப்பிட்டு யார் தேநீர் விருந்து நடத்தப்போகிறார்கள்? நமக்கு நாமே நடத்திக்கொண்டால்தான் உண்டு!" என்றாள், அவள்.

"நம்மால் அவர்களுக்கு ஆகவேண்டிய காரியமோ, அவர்களால் நமக்கு ஆகவேண்டிய காரியமோ ஒன்றுமில்லையல்லவா?" என்றேன் நான்.

இந்தச் சமயத்தில், "பிரயோசனமில்லை ; இத்தனை நாட்கள் சித்ராவிடம் சிட்சை பெற்று வந்தும் பிரயோசனமில்லை!" என்று கையை விரித்துக் கொண்டே பாரிஸ்டர் பரந்தாமன் உள்ளே நுழைந்தார்.

"நானும் கண்ணனா என்ன, சித்ராவின் சிட்சை என்னிடம் பலிப்பதற்கு?" என்றேன் நான்.

"நீரும் கண்ணனாகாமல் சாந்தினியும் சித்ராவாகாமல் இன்னும் எத்தனை நாட்கள் தான் இருக்கப்போகிறீர்கள்? பேசாமல் ஏதாவது ஒரு வேலையையாவது பாருமே, ஐயா!"

"என்ன வேலை பார்ப்பதாம்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/196&oldid=1378720" இலிருந்து மீள்விக்கப்பட்டது