பக்கம்:கண் திறக்குமா.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

கண் திறக்குமா?

ஆனால் விரதம் பூண்டவர்களின் மனைவிமார் அதற்கு ஆதரவு காட்டவில்லை. காரணம், பெண்மைக்கு இயல்பான குழந்தை இன்பத்தை அவர்கள் விரும்பியதுதான். இந்தக் குற்றமற்ற விருப்பத்தை அறிந்த பிறகும் அவர்களுடைய கணவன்மார் தங்களுடைய விரதத்தைக் கைவிடவில்லை. ஆகவே, வேறு வழியின்றி அவர்களில் சிலர் மகாத்மாவின் மீது படையெடுத்தனர். என்ன செய்வார், காந்திஜி? உடனே அந்த அதிசயப் பிரகிருதிகளை வரவழைத்து, விரதத்தைக் கைவிடும்படி வேண்டிக் கொண்டார். அவர்களும் அதற்கு இசைந்தனர். கேலிக்கு இடமான இந்த விரத பங்கத்துக்கு ஆளாவதைக் காட்டிலும் விரதம் எடுத்துக் கொள்ளாமலிருப்பதே நல்லதல்லவா? அதைவிட விவாகம் செய்து கொள்ளாமலிருப்பதே நல்லதல்லவா?

அதிலும், என்னைப் போன்றவர்களுக்கு இன்னொரு சங்கடமும் இருந்தது. குடும்பத்துக்குத் தலைவனாயிருக்கும் ஒருவன் தேசத்துக்குத் தொண்டனாகவும் இருக்க வேண்டுமானால் அவனுக்குப் பணத்தைப் பற்றிய கவலையே இல்லாமலிருக்கவேண்டும். அந்தக் கவலை தான் எனக்கு அப்போது அல்லும் பகலும் அனவரதமும் இருந்து கொண்டிருந்ததே. இந்த லட்சணத்தில் கல்யாணம் வேறு செய்து கொண்டு என்னத்தைச் செய்ய?

ஆனால் எனக்காக ஒரு பெண் எவ்வளவு நாட்கள் காத்துக்கொண்டிருக்க முடியும்? அவள் காத்துக்கொண்டிருந்தாலும் அந்தப் பிரசித்தி பெற்ற ‘நாலுபேர்' இருக்கிறார்களே, அவர்கள் காத்துக்கொண்டிருப்பார்களா? - இதுவும் ஒரு பிரச்னையாகத்தான் இருந்தது எனக்கு. எது எப்படியிருந்தாலும் முதலில் வரும்படிக்கு ஏதாவது வழி தேடிக் கொண்டால் தேவலை என்று தோன்றவே, அதைப் பற்றித் தீவிரமாக யோசித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/199&oldid=1378782" இலிருந்து மீள்விக்கப்பட்டது