பக்கம்:கண் திறக்குமா.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

97

சில தேசபக்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நாள் இருபத்துநான்கு மணி நேரமும் தேசத்துக்காகவே உழைக்கிறார்கள். அதிலும் உள்ளூரில் இருந்து கொண்டே உழைக்கிறாகளா என்றால் அதுவும் இல்லை; அடிக்கடி வெளியூர் செல்கிறார்கள் - எப்படி? கால் நடையாகவா? - இல்லை - ரயிலில் ஏறிக்கொண்டு ஓடுகிறார்கள்; ஆகாய விமானத்தில் ஏறிக்கொண்டு பறக்கிறார்கள்; காரில் ஏறிக்கொண்டு அலைகிறார்கள் - இத்தனைக்கும் அவர்களுடைய உடம்பு கொஞ்சமாவது இளைக்கிறதா? - கிடையாது; கிடையவே கிடையாது. அதற்குப் பதிலாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பருத்துக்கொண்டே வருகிறது; அவர்களுடைய குடும்பமும் எந்தவிதமான கவலையுமின்றித் தழைத்துக் கொண்டே வருகிறது; அதற்கு வேண்டிய செல்வமும் பெருகிக் கொண்டே வருகிறது - இது எப்படி? - வரும்படியில்லாமல் இப்படியும் ஒருவன் வாழ முடியுமா? இப்படியும் ஒருவன் தேசத் தொண்டனாயிருக்க முடியுமா? - இதுதான் எனக்குப் புரியாத புதிராயிருந்தது!

தலைவர்களைக் கண்டால் விழுந்தடித்துக் கொண்டு போய் மாலை போடுவதும், அவர்கள் ஏதாவது சொல்வதற்கு முன்பே கை தட்டுவதும் தவிர நமக்கு இந்த அரசியல் உலகத்தில் வேறு என்ன தெரிந்து தொலைகிறது?

ஆகவே, வரும்படி உள்ள தேச பக்தனாக வாழ எனக்கு வழி தெரியவில்லை. காங்கிரஸின் பேரால் தேர்தலில் வேண்டுமானால் போட்டியிடலாம்; அதன் பயனாக ஏதாவது ஓர் அங்கத்தினர் பதவியையாவது கைப்பற்றலாம்; அதைக் கொண்டு காலத்தை ஒருவாறு தள்ளலாம் என்று பார்த்தாலும் அங்கே என்னைப் போன்றவர்களை நெருங்கவே விடமாட்டோம் என்று சொல்லி விட்டார்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/200&oldid=1378709" இலிருந்து மீள்விக்கப்பட்டது