பக்கம்:கண் திறக்குமா.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

201

வில்லை; தங்களுடைய தேசமாகவே கருதி அதையும் யுத்தத்தில் இழுத்து விட்டுவிட்டனர். இந்த அக்கிரமத்தைக் கண்டு காங்கிரஸ் மகாசபை வெகுண்டெழுந்தது. காந்தி மகாத்மாவின் தலைமையில் மீண்டும் போர்க் கோலம் பூண்டது. அதன் பயனாக ஆரம்பிக்கப்பட்ட தனிப்பட்டோர் சத்தியாக்கிரகத்தில் வினோபா பாவே சர்க்காரின் முதல் விருந்தாளியானார். அவரைத் தொடர்ந்து பலர் சிறைக்குச் சென்றனர். பாரிஸ்டர் பரந்தாமனுக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்தது. ஆனால் என்னைப் போன்றவர்களுக்கோ? - அதுவும் கிட்டவில்லை. ஏன்? நாங்கள் சத்தியாக்கிரகம் செய்யவில்லையா? செய்யத்தான் செய்தோம். ஆனால் சர்க்கார் எங்களைக் கைது செய்யவில்லை; அதற்குப் பதிலாக லாரியில் ஏற்றிக் கொண்டு போய்ப் போக்குவரத்துக்கு வசதியில்லாத காட்டில் விட்டுவிட்டு வந்து விட்டார்கள்.

இந்த ஏமாற்றத்தால் வேறுவழியின்றி நான் மீண்டும் வாத்தியார் வேலையைக் கவனிக்கலானேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு விடுதலையடைந்த பாரிஸ்டர் பரந்தாமன் என்னைக் கண்டதும், "நீர் எப்பொழுது விடுதலை அடைந்தீர்?" என்றார் வியப்புடன்.

எனக்கோ எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போலிருந்தது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், "நான் தான் சிறைக்கே செல்லவில்லையே?" என்றேன் உடைந்த உள்ளத்துடன்.

"ஏன், இம்முறை நீர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொள்ளவில்லையா?"

"கலந்து கொண்டதென்னவோ உண்மைதான்; கைது தான் செய்யவில்லை!"

அப்படியானால் தயவுசெய்து என்னுடைய அனுதாபத்தை ஏற்றுக் கொள்ளும்" என்றார் பரந்தாமனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/204&oldid=1378703" இலிருந்து மீள்விக்கப்பட்டது