பக்கம்:கண் திறக்குமா.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

207


என்னுடைய உதவியை நாடினார். காங்கிரஸுக்கு முழுக்குப் போட்டிருந்ததோடு, சத்தியத்துக்கும் முழுக்குப் போட்டிருந்த நான், உடனே அவருடைய கோரிக்கைக்கு இணங்கினேன். அதன் பயனாக எந்த 'காண்ட்ராக்ட்' எடுத்தாலும் அதை என்னுடைய பெயரால் எடுப்பதென்றும், கிடைக்கும் லாபத்தை இருவரும் பங்கு போட்டுக் கொள்வதென்றும் முடிவாயிற்று.

"ஐயா, காங்கிரஸ்காரரே என்னைக் கொண்டு, நீங்கள் காண்ட்ராக்ட் எடுப்பதே பிசகு; அதில் கிடைக்கும் லாபத்தில் பங்கு பெறுவது அதைவிடப் பெரிய பிசகல்லவா?" என்றேன் ஒருநாள் சிரித்துக் கொண்டே.

"உண்மைதான்; ஆனால் என்னுடைய வாழ்க்கையை மேலும் மேலும் உயர்த்திக் கொள்ள இன்னும் எத்தனை தவறுகள் வேண்டுமானாலும் செய்ய நான் தயாராயிருக்கிறேன். பார்க்கப்போனால் உலகத்தில் எது சரியான காரியம், எது தவறான காரியம் என்று தீர்மானிப்பது கடினம். உமக்குத் தவறாகத் தோன்றுவது எனக்குச் சரியானதாகத் தோன்றலாம்; எனக்குச் சரியாகத் தோன்றுவது உமக்குத் தவறானதாகத் தோன்றலாம் - இல்லையா?" என்றார் அவர்.

"சொல்லுங்கள், சொல்லுங்கள். எதைச் சொன்னாலும் இப்போது நான் கேட்கத் தயாராயிருக்கிறேன். சொல்லுங்கள், சொல்லுங்கள்" என்றேன் நான்.

"சொல்லுகிறேன், அவசியம் சொல்கிறேன். உம்மைப் போன்றவர்கள் எதிலும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் வெகு சீக்கிரத்தில் சாவை நெருங்கி விடுகிறார்கள். வாழ விரும்புபவன் எவனாயிருந்தாலும் சரி, எதிலும் பட்டும் படாமல் இருக்க வேண்டும். மனச் சாட்சிக்கு அவன் மறந்தும் இடங்கொடுத்துவிடக்கூடாது!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/210&oldid=1378689" இலிருந்து மீள்விக்கப்பட்டது