பக்கம்:கண் திறக்குமா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

21

எனக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. அந்த மனிதரின் கன்னத்தில் ஓங்கி ஒர் அறை விட்டால் என்ன என்றுகூடத் தோன்றிற்று. ஆனால் எந்த காந்தியை அவர் திட்டினாரோ, அந்தக் காந்தியின் தத்துவம் அதற்கு விரோதமாயிருக்கவே, பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு என் அதிருப்தியைத் தெரிவித்தேன். அதே சமயத்தில் ஆயிரமாயிரம் குரல்களிலிருந்து எழும்பிய “வந்தே மாதரம்!” என்னும் வானளாவிய ஓசை என் கவனத்தைக் கவர்ந்தது; விழுந்தடித்துக்கொண்டு மாடி வராந்தாவை நோக்கி ஓடினேன். தெருவில் மாபெரும் ஊர்வலம் ஒன்று சென்று கொண்டிருந்தது. கையில் புத்தகங்களுடன் கலாசாலை மாணவர்களும் மாணவிகளும் பெருவாரியாக அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருடைய முகத்திலும் வீராவேச உணர்ச்சி பொங்கி வழிந்து கொண்டிருந்தது. கூட்டத்துக்கு முன்னால் நிமிர்ந்த நடையுடனும் நேர் கொண்ட பார்வையுடனும் ஓர் இளைஞன் சென்று கொண்டிருந்தான். அவன் கையில் இந்த மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது. அவனுக்குப் பின்னால் சென்ற இருவர், “மகாத்மா காந்தியை உடனே விடுதலை செய்!” என்று அதிகாரத் தோரணையில் பொறிக்கப்பட்டிருந்த விளம்பரத்தைத் தாங்கிச் சென்றுக் கொண்டிருந்தனர்.

நடுநடுவே, “மகாத்மா காந்திக்கு ஜே!” என்றும், “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வீழ்க!” என்றும், “நமதே ராஜ்யம், அடைந்தே தீருவோம்!” என்றும் உச்சஸ்தாயியில் எழுந்த கோஷங்கள் செத்த பிணத்தையும் உயிர்ப்பிக்கக் கூடியவையாயிருந்தன - அவ்வளவுதான்; அந்த நிமிஷமே இன்னதென்று விவரிக்க முடியாத ஒருவிதப் பரவச நிலையை நான் அடைந்துவிட்டேன். என்னுடைய உடலில் ஓடிக்கொண்டிருந்த ஒவ்வொரு நரம்பும் புடைத்து எழுந்து, ரோமங்கள் குத்திட்டு நின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/24&oldid=1379266" இலிருந்து மீள்விக்கப்பட்டது