பக்கம்:கண் திறக்குமா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

கண் திறக்குமா?

நான் மனிதனானேன். என்னையறியாமலே என் வாய், “வந்தே மாதரம்” என்று கோஷமிட்டது; என்னையறியாமலே என் கைகள் அந்த இளைஞன் விட்டுச் சென்ற தாயின் மணிக்கொடியைத் தாங்கின!

அவ்வளவுதான்; போலீஸார் ஓடோடியும் வந்து என்னைச் சூழ்ந்துகொண்டனர். மனிதனுக்காகச் சட்டம் என்பதை மறந்து, சட்டத்துக்காக மனிதனை வதைக்கும் அவர்களைக் கண்டதும் என்னுடைய எரிச்சல் எரிமலையாயிற்று. “அன்னியன் உங்களை என்றும் ஆள வேண்டுமென்றோ நீங்கள் சொந்த நாட்டுச் சகோதரர்களை இப்படி அடித்து நொறுக்குகிறீர்கள்? அவர்கள் கேட்கும் விடுதலை உங்களுக்கும் வேண்டாமா? கேவலம், இருபது முப்பது ரூபாய்ச் சம்பளத்துக்காக உங்களை, உங்கள் உயிரை, உங்கள் உரிமையை நீங்கள் விலைக்கு விற்றுவிடுவதா? - வெட்கக்கேடு! - எட்டிச் செல்லுங்கள்; எங்களை அடித்து நொறுக்குவதற்குப்பதிலாக அந்த வெள்ளைக்காரப் பயல்களை அடித்து நொறுக்குங்கள்!” என்று மேலே ஏதோ சொல்வதற்குள் என் தலையில் ஏக காலத்தில் பல அடிகள் விழுந்தன - நான் வெறியனானேன்! - அஹிம்சை என்னைக் கைவிட்டு விட்டதோ, நான் அதைக் கைவிட்டு விட்டேனோ, அது எனக்குத் தெரியாது, - அடிக்குப் பதில் அடி; இரத்தத்திற்குப் பதில் இரத்தம்!

ஆனால் அதன் பலன்? - மற்றவர்களைவிட வெகு சீக்கிரத்திலேயே நான் உணர்விழந்து கீழே விழுந்தேன்.

என் கண்கள் இருண்டன; அதற்குப் பின் என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா? - யாருக்குத் தெரியும்?


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/27&oldid=1379420" இலிருந்து மீள்விக்கப்பட்டது