பக்கம்:கண் திறக்குமா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

29



“என் கண்ணே! இப்படிக்கூட என் தலையில் கல்லைத் தூக்கிப் போடலாமா?" என்று கதறிக் கொண்டே என் தாயார் வந்தார்கள்.

அவர்களைத் தொடர்ந்து என் தங்கை சித்ராவும் வந்து கொண்டிருந்தாள்.

"நேற்றுக்கூட இவர்களை நான் இங்கே பார்த்தேன்; நர்சுகள் உன்னைப் பார்க்கவிடாமல் இவர்களை விரட்டி விட்டார்கள்!” என்று சொல்லிக்கொண்டே, பாலு தன் படுக்கைக்குச் சென்றுவிட்டான்.

அம்மாவுடன் சேர்ந்து அழ எனக்கு விருப்பமில்லை. எனவே, வழக்கமான தோரணையிலேயே ஆரம்பித்தேன். "நான் என்ன செய்வேன் அம்மா? வெள்ளைக்காரன் தலையில் கல்லைத் தூக்கிப் போடவேண்டுமென்பதுதான் என் ஆசை. அந்தப் பாழுங்கல் தவறி உன் தலையிலே விழுந்துவிட்டதாக்கும்?"

'இது என்ன, அண்ணா? எந்தச் சமயத்தில் யாரிடம் எப்படிப் பேசவேண்டும் என்றுகூட உங்களுக்குத் தெரியாதா?" என்று குறுக்கிட்டுக் கேட்டாள் சித்ரா.

“சரி, எப்படிப் பேசவேண்டும்?”

"நாசமாய்ப் போச்சு! உங்களைப் பற்றிக் கேள்விப் பட்டவுடனே அம்மா பேச்சு மூச்சு இல்லாமல் கீழே விழந்து விட்டார்கள். டாக்டரைக் கூட்டிக் கொண்டு வந்து காட்டும் வரை அவர்கள் பிழைத்து எழுந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லாமற் போய்விட்டது. அதிலும் அம்மாவுக்குத் தன் குடும்பமும் அதன் கெளரவமுந்தான் பெரிது. அதற்கான வழியில்தான் அவர்கள் உங்களை வளர்த்து வந்தார்கள். வெள்ளைக் காரன் தலையில் கல்லைத் துக்கிப் போடவா வளர்த்தார்கள்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/32&oldid=1379146" இலிருந்து மீள்விக்கப்பட்டது