பக்கம்:கண் திறக்குமா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கண் திறக்குமா?

அன்னிய ஆதிக்கம் ஒழிந்தாலும் ஏழைகளைப் பீடித்த பணக்கார ஆதிக்கம் ஒழியாது!”

“நாங்களெல்லாம் அதைப் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்போம்?”

சித்ராவுக்குச் சிரிப்பு வந்தது, “நீங்கள் அவர்களை என்ன செய்ய முடியும்? மாடிக்குச் செல்பவர்களுக்கு உபயோகமாயிருக்கும் படிகளைப்போல் வேண்டுமானால் இருக்கலாம்! மக்களோ, நீங்கள் என்னதான் உண்மையை எடுத்துச் சொன்னாலும் உங்களை நம்ப மாட்டார்கள். பணக்காரன் சிறைக்குப் போனால், ‘ஆஹா, என்ன தியாகம், என்ன தியாகம்! ஏழைகளுக்காக அவன் தன் சுக போகங்கள் அனைத்தையும் எப்படி உதறித் தள்ளி விட்டான், பார்த்தீர்களா?’ என்று அவர்கள் புகழ்வார்கள். ஏழை சிறைக்குப் போனாலோ, ‘பாவம்’ வெளியே இருந்துகொண்டு வயிற்றுக்கு என்ன செய்வான்? அதனால்தான் சிறைக்குப் போய்விட்டான்!” என்பார்கள். பத்திரிகைகளைப் பற்றியோ கேட்க வேண்டியதில்லை; பணக்காரர்களை ஆதரிக்காவிட்டால் அவற்றின் கதி அதோகதிதான்! நேற்றைக்கு முன் தினம் நடந்த சம்பவத்தைத்தான் எடுத்துக் கொள்வோமே? உங்களைப் பற்றி எந்தப் பத்திரிகையிலாவது ஒரு வார்த்தை உண்டா, மொத்தத்தில் ஊர்வலம் ஒன்று கலைக்கப்பட்டது என்பதைத் தவிர! அதே பத்திரிகைகள் வீட்டுக்குள் இருந்தபடி காந்திஜி கைது செய்யப்பட்டதைக் கண்டித்துப் பணத்தாலும் பட்டம் பதவிகளாலும் அந்தஸ்து வாய்ந்தவர்கள் என்று ஒரு சிலரால் கருதப்படுபவர்களின் அறிக்கைகளை மட்டும் பிரமாதப்படுத்திப் பிரசுரித்திருந்தன; அந்த அறிக்கைகளோடு அவர்களுடைய படங்களையும் சேர்த்து வெளியிட்டிருந்தன. சில பத்திரிகாசிரியர்கள் அவர்களுடைய அறிக்கையை வரவேற்றுத் தலையங்கங்கள் கூட எழுதியிருந்தார்கள். இந்த லட்சணத்தில் மக்களுக்கு உங்களிடம் மதிப்பிருக்குமா, அவர்களிடம் மதிப்பிருக்குமா?” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/35&oldid=1379168" இலிருந்து மீள்விக்கப்பட்டது