பக்கம்:கண் திறக்குமா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

35

சிறைக்கு அனுப்பிவிட்டு நான் எப்படி உயிரை வைத்துக் கொண்டிருப்பேன்?’ என்று கண்ணிரும் கம்பலையுமாக என்னைத் தடவிக் கொடுத்தார்கள் என் தாயார்.

அதே சமயத்தில் பார்வையாளரின் நேரம் முடிந்து விட்டதை அறிவிக்கும் ஆஸ்பத்திரியின் மணி அடித்தது. சித்ராவும், தாயாரும் என்னைப் பிரிய மனமின்றிப் பிரிந்தார்கள்.

அவர்கள் மறைந்ததுதான் தாமதம்; நாகரீக யுவதி ஒருத்தி, கவலை நிறைந்த கண்களுடன் என் படுக்கையருகே வந்து, என்னைத் தன் மலர்க் கரங்களினால் மெல்லத் தீண்டினாள்.

நான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன்; அவளுடைய அகன்ற விழிகள் என்னை அனுதாபத்துடன் நோக்கின.

அடுத்த நிமிஷம் என் புருவங்கள் சற்றே உயர்ந்து தாழ்ந்தன. இன்னதென்று விவரிக்க முடியாத ஒருவித உணர்ச்சியும் வியப்பும் ஒருங்கே அடைந்தவனாய் அவளை ஏறிட்டுப் பார்த்தேன்.

அவள் கண்கள் கலங்கின; அதற்குமேல் என்னால் மெளனம் சாதிக்க முடியவில்லை. ‘சாந்தினி, நீயா!’ என்றேன், கனவுலகில் சஞ்சரிப்பவனைப்போல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/38&oldid=1379165" இலிருந்து மீள்விக்கப்பட்டது