பக்கம்:கண் திறக்குமா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36



3. அரும்பு மலர்ந்தது!

பாரிஸ்டர் பரந்தாமனாரின் செல்வப்பெண் சாந்தினி. வாழ்க்கையில் வேண்டுமானால் பெண்இனத்தில் நாம் எத்தனையோ விதமான அழகிகளைப் பார்க்கலாம். சிலரைப் பார்த்தால் கண்ணை மூடிக் கொள்ளலாம்போல் தோன்றும்; வேறு சிலரைப் பார்த்தால் கண்ணை மூடிக்கொள்ள வேண்டாம்போல் தோன்றும். ஆனால் கதைகளில் வரும் கதாநாயகிகள் மட்டும் பெரும்பாலும் அழகிகளா? இல்லை; மிக மிகப் பொல்லாத அழகிகள்!

பார்த்த மாத்திரத்தில் கதாநாயகனின் உடல், பொருள், ஆவி மூன்றையும் அவர்கள் அபகரித்துக் கொண்டு, அவனை அசரீரியாக்கி விடுவார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அதற்குப் பிறகும் அந்த அப்பாவிக் கதாநாயகன் உயிரோடு இருந்து, கதாநாயகியையும் காதலித்து, கடைசியில் அவளைக் கல்யாணமும் செய்து கொண்டு, கதையையும் சுபமாக முடித்து வைப்பான்!

நல்ல வேளையாகச் சாந்தினி அவ்வளவு பொல்லாத அழகியாயில்லை; சாதாரண அழகியாய்த் தானிருந்தாள். ஆனால் ஒருமுறை பார்த்தால் இன்னொரு முறையும் பார்க்கவேண்டும்போல் இருக்கும் அவள் தோற்றம். குரலின் இனிமையோ கேட்கக் கேட்க அலுக்காது; குணத்திலும் அப்படியொன்றும் குற்றம் சொல்வதற்கில்லை.

எனினும்; பரந்தாமனார் தம் பெண்ணிடம் உயிரையே வைத்துக்கொண்டிருந்தார் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், அவர் வீட்டிலும் வெளியிலுமாக உயிரோடு நடமாடிக் கொண்டிருந்தார்!

அவருடைய வீட்டில் சாந்தினிக்கு நேர் இளையவள் என்று சொல்லக்கூடிய இன்னொரு ஜீவனும் நடமாடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/39&oldid=1379159" இலிருந்து மீள்விக்கப்பட்டது