பக்கம்:கண் திறக்குமா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

கண் திறக்குமா?

பரிபூரண விடுதலையளிக்கப் போகிறவர்களே இப்படி நடந்துகொண்டால், நாங்களெல்லாம் என்றைக்குத்தான் ஆண்களோடு சரிநிகர் சமானமாகப்பழகுவது?”

“அப்படியெல்லாம் நான் ஒன்றும் சொல்ல வில்லையே; உங்கள் அப்பாதானே சொல்கிறார்!”

“அவர் கைக்கு அதிகாரம் வருவதற்கு முன்பே புரட்டப் போகிறார்; நீங்கள் கைக்கு அதிகாரம் வந்தபிறகு புரட்டப் போகிறீர்கள்! - இவ்வளவுதானே உங்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம்? - தமது உள்ளத்தில் இருந்தவற்றையெல்லாம் நீங்கள் எப்படியோ கண்டுபிடித்துச் சொல்லிவிட்டதாக அவர் பீற்றிக்கொண்டாரே, அன்றைக்கே உங்களுடைய லட்சணமும், அவருடைய லட்சணமும் இவ்வளவுதான் என்று தெரிந்துவிட்டதே!”

“என்ன தெரிந்துவிட்டது?”

“உண்மையிலேயே அவர் தம் கொள்கைப்படி ஒரு பால்ய விதவையை இரண்டாந்தாரமாகக் கொள்வதற்கு நானா தடையாய் இருந்தேன்? அவர் அவ்வாறு செய்து கொண்டிருந்தால் நீங்கள் நினைக்கிறபடி என்னுடைய வாழ்க்கை அஸ்தமித்தா போய்விடும்? எனக்கென்று முற்போக்குடைய வாலிபன் ஒருவன் இந்தப் பரந்த உலகத்தில் கிடைக்காமலா போயிருப்பான்? உங்களுடைய சுயநலத்திற்காக நீங்கள் செய்வதையெல்லாம் செய்துவிட்டுப் பழியைப் பிறர்மீது சுமத்தி விடுகிறீர்களே?”

“இதென்ன கூத்து! நானா உங்கள்மீது பழி சுமத்தினேன்?”

“சந்தேகமில்லாமல்! இல்லையென்றால், வயது வந்த பெண் ஒருத்தி உங்களுக்கு இருக்கும்போது நீங்கள் இரண்டாந்தாரம் கொள்ளாமலே இருந்திருக்கலாம் என்று நீங்கள் ஏன் அன்று அடித்துச் சொல்லியிருக்கக்கூடாது?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/47&oldid=1379075" இலிருந்து மீள்விக்கப்பட்டது