பக்கம்:கண் திறக்குமா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்


இந்தத் தர்மத்திலிருந்து எங்களைப் போன்றவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க முடியுமா, என்ன? அதிலும் நாங்கள் செய்த குற்றம் சாதாரணமானதா? ‘சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை’ என்று சொல்லிக்கொண்டு, அதற்காகக் கிளர்ச்சி செய்த மகத்தான குற்றத்தையல்லவா நாங்கள் செய்திருக்கிறோம்? ஆகவே, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு போய், மறுநாள் கோர்ட்டில் நிறுத்தி வைத்தார்கள். சத்தியத்தையன்றி வேறொன்றும் அறியாத போலீஸாரை எதிர்த்து எங்களில் யாரும் எதிர்வழக்காட விரும்பவில்லை; காங்கிரஸ் தலைவர்களும் எங்களை அதற்கு அனுமதிக்க வில்லை.

அடியேன்மீது அப்போது எத்தனை குற்றங்கள் சுமத்தப்பட்டன என்று இப்போது எனக்கு ஞாபகமில்லை. ஆனால் மூன்று வருடங்கள் கடுங்காவல் தண்டனை பெற்றது மட்டும் இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது.

மூன்று வருடங்கள், மொத்தம் ஆயிரத்துத் தொண்ணூற்றைந்து நாட்கள்!

அதுவரை அம்மாவைப் பார்க்க முடியாது; அருமைத் தங்கையையும் காண முடியாது. உற்ற நண்பர்கள், ஊரோடு பழகியவர்கள், இனி நம்மைச் சந்திக்க மாட்டார்கள்; அளவளாவ மாட்டார்கள். நம்மை நம்பியிருந்த தாயார், நமக்காக எத்தனையோ தியாகங்களைச் செய்த தாயார்; நம்முடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றி என்னவெல்லாமோ கனவு கண்டுகொண்டிருந்த தாயார், நம்முடைய பேச்சிலும் சிரிப்பிலும், அன்புக்குகந்த அப்பாவின் பிரிவை மறந்திருந்த தாயார் - இனி என்ன செய்வார்கள்? - நாம் திரும்பி வரும் வரை உயிரோடு இருப்பார்களா? - சித்ரா பாவம்; பெண்ணாய்ப் பிறந்தவள்; தந்தையற்றவள்; தன்னந்தனியாக வாழ்வதற்குத் தைரியமிருந்தாலும் நாக்கில் நரம்பின்றித் துற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/50&oldid=1379097" இலிருந்து மீள்விக்கப்பட்டது