பக்கம்:கண் திறக்குமா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

67


நம்முடைய பரிதாப நிலையைக் கண்டு அவர் மேலும் ஏதாவது பரிகாசம் செய்ய ஆரம்பித்துவிட்டால்?

என்ன இருந்தாலும் பெரிய மனிதர்; சந்தர்ப்பம் தெரியாமலா நடந்து கொள்வார்? - என்னவோ, யார் கண்டார்கள்? - ஆனானப்பட்ட மகாத்மா காந்தியையே வெளுத்துக் கட்டும் அவருக்கு நாம் எம்மாத்திரம்?

இப்படியெல்லாம் மனம் போனபடி எண்ணமிட்டுக் கொண்டிருந்த நான், "சாமி! எப்போ வந்தீங்க சாமி?" என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்; என் அருகே விசாலம் நின்றுகொண்டிருந்தாள்.

விதவையான அவள் எங்கள் வீட்டில் வேலைக்காரியாயிருந்தவள். ஆனால் அந்தச் சமயத்தில் அவள் எனக்கு வேலைக்காரியாகத் தோற்றமளிக்கவில்லை; என்னை வாழ்விக்க வந்த தேவ கன்னிகையாகத் தோற்றமளித்தாள்!

அளவற்ற ஆவலுடன் நான் அவளை வெறித்துப் பார்த்தேன்.

"என்ன சாமி, முளிக்கிறீங்க? என்னைத் தெரியலைங்களா?" என்று கேட்டாள் அவள்.

"தெரியாமலென்ன, விசாலம்தானே?"

"ஆமாம், சாமி! - ஐயோ, இப்படிக்கூட யாராச்சும் செய்வாங்களா? பெரிய எசமானியம்மா சாகிறவரையிலே உங்க பேரைச் சொல்லிச் சொல்லி அழுதுகிட்டிருந் தாங்களே!" என்று சொல்லிக்கொண்டே, அவள் முந்தானையால் தன் கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டாள்.

நான் அவளுடைய பேச்சை மாற்ற எண்ணி, "இப்போது நீ எங்கே வேலை செய்கிறாய்?" என்று கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/70&oldid=1379084" இலிருந்து மீள்விக்கப்பட்டது