பக்கம்:கண் திறக்குமா.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

69


முந்தானையை இன்னொருத்தனுக்கு எப்படி சாமி, போட முடியும்?"

எனக்குச் சிரிப்பு வந்தது, தன்னால் அந்த 'விதவா விவாக தர்ம'த்தை அனுஷ்டிக்க முடியாவிட்டாலும், பிறரையாவது அனுஷ்டிக்கும்படி 'வக்கீல் ஐயா' வற்புறுத்துகிறாரே என்று நினைத்துக்கொண்டேன்.

நான் சிரித்ததைக் கண்டு, "என்ன சாமி! நீங்க கூடச் சிரிக்கிறீங்களே?" என்றாள் அவள்.

"ஒன்றுமில்லை; உன் புருஷன் மீது நீ வைத்திருக்கும் பக்தியை நினைத்துக் கொண்டேன்!" என்றேன் நான்.

"இல்லாம எங்கே போகும், சாமி? செத்தாலும் அந்த மனுஷன் என் கண்ணை விட்டுத்தான் மறைஞ்சானே தவிர, மனசைவிட்டு இன்னும் மறையலையே? - அப்படியிருக்கிறப்போ, என் மனசிலே இன்னொருத்தனுக்கு நான் எப்படி இடங்கொடுக்க முடியும்?"

அவள் பேச்சில் நியாயம் இருந்தது. இருந்தாலும் அந்தச் சமயத்தில் அது எனக்குத் தலைவலியாயிருந்தது. "இவள் அந்த வக்கீல் ஐயாவின் தலையை உருட்டுவதற்குப் பதிலாக நம் தலையை உருட்டித் தொலைக்கிறாளே" என்று உள்ளுற எண்ணிக்கொண்டு, "அதனாலென்ன 'அப்படியே பண்ணிக்கொள்கிறேன்' என்று சொல்லி விட்டுப் பேசாமல் இருந்து விட்டால் போச்சு!" என்றேன் நான்.

"எல்லாம் சொல்லிப் பார்த்தேன் - அவர் கேட்டாத் தானே? - ஒரு நாளைப்போல எவனையாச்சும் கூட்டிக் கிட்டு வந்து, 'இவனைக் கட்டிக்கிறியா, இவனைக் கட்டிக்கிறியா?'ன்னு உசிரை வாங்குறாரு, சாமின்னா!" என்றாள் அவள் விடாமல்.

"கவலைப்படாதே; உனக்குத் தெரியாமல் உன் கழுத்தில் எவனாலும் தாலி கட்டிவிட முடியாது!" என்றேன் நான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/72&oldid=1379248" இலிருந்து மீள்விக்கப்பட்டது