பக்கம்:கண் திறக்குமா.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73


இந்தச் சோதனையில் நான் ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்த நாய் ஒன்று, சில மனிதர்களைப் போல அடிமை வாழ்விலும் கடமையை மறக்காமல், 'வள், வள்' என்று குரைத்தது.

அடுத்த நிமிஷம் உடையில் பண்டித மோதிலால் நேருவை ஞாபகப்படுத்தும் ஒரு மனிதர் அங்கே தோன்றி, "யார் அது?" என்றார் அதட்டும் குரலில்.

அவர் வேறு யாருமல்ல; பாரிஸ்டர் பரந்தாமனே தான்!

நான் மௌனமாகச் சென்று அவருக்கு முன்னால் நின்றேன்.

கதர்க் குல்லாயைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு அவர் என்னை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தார். பிறகு, "அட, நீயா! நீயேதானா!" என்றார்.

என்ன காரணத்தாலோ அப்பொழுதும் ஒன்றும் சொல்லத் தோன்றாமல், அவரையும் அவர் வீட்டு முற்றத்தின் சுவரை அலங்கரித்துக் கொண்டிருந்த மகாத்மா காந்தியின் படத்தையும் நான் மாறி மாறிப் பார்த்த வண்ணம் விழித்துக்கொண்டிருந்தேன்.

"ஏன், இன்னும் சந்தேகம் தீரவில்லையா? - நீ பார்க்கும் பார்வையைப் பார்த்தால் என்னைக்கூடப் பாரிஸ்டர் பரந்தாமன் என்று ஒப்புக்கொள்ள மாட்டாய் போலிருக்கிறதே?" என்றார் அவர்.

அப்பொழுதும் நான் லேசாகச் சிரித்துவிட்டு மௌனம் சாதித்தேன்.

அவர் என் கையைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றார். 'இவரைப் போன்ற ஏகாதிபத்திய தாசர்களின் மனமாற்றத்துக்கு நம்மைப் போன்ற அற்பர்களின் தியாகமும் ஓரளவு காரணமாயிருந்திருக்குமல்லவா?' என்ற பெருமிதத்துடன் நான் அவரைத் தொடர்ந்து சென்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/76&oldid=1379148" இலிருந்து மீள்விக்கப்பட்டது