பக்கம்:கண் திறக்குமா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

75

"எது உங்களுடைய சொந்த விஷயம்?"

"நாங்கள் மனம் மாறியதுதான்!"

"அது எப்படி சொந்த விஷயமாகும்?"

"சொல்கிறேன் - இருந்தாற்போலிருந்து அந்த காந்தி கோர்ட்டு பகிஷ்காரம், அந்நியத் துணி பகிஷ்காரம், பள்ளிக்கூட பகிஷ்காரம் என்று ஆரம்பித்து விட்டான்..."

"அதனாலென்ன?"

"சரியாய்ப் போச்சு! - அந்நியத் துணி பகிஷ்காரம், பள்ளிக்கூடப் பகிஷ்காரம் இவற்றைப்பற்றி வேண்டுமானால் கவலைப்படாமலிருக்கலாம்; கோர்ட்டு பகிஷ் காரத்தைப் பற்றி என்னைப்போன்றவர்கள் கவலைப்படாமல் இருக்க முடியுமா?"

"அந்தக் கவலைதான் உங்களைக் காங்கிரஸ்காரனாக மாற்றிவிட்டதா, என்ன?"

"ஆமாம் தம்பி, ஆமாம் - இல்லையென்றால் இந்த வேஷத்தை நான் ஏன் போட்டிருக்கப் போகிறேன்?"

"இதனால் உங்களுடைய கவலை தீர்ந்துவிடுமா, என்ன?"

"அதெல்லாம் அவரவர்களுடைய திறமையைப் பொறுத்தது. இந்த மாதிரி வேஷத்தால் சிலர் தங்கள் கவலையைத் தீர்த்துக் கொள்வதுமுண்டு; கஷ்டத்தை விலைக்கு வாங்கிக்கொள்வதுமுண்டு!"

"சரி, உங்களுடைய உத்தேசம் என்ன?"

"கவலையைத் தீர்த்துக்கொள்ளும் உத்தேசந்தான்!"

"அதற்கு நீங்கள் பழைய பாரிஸ்டராகவே இருந்திருக்கலாமே?"

"அது தெரியாதா, எனக்கு? - அந்தப் பாழும் தொழிலில் பணம் பண்ணுவதைத் தவிர வேறு என்னப்பா, இருக்கிறது?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/78&oldid=1379160" இலிருந்து மீள்விக்கப்பட்டது