பக்கம்:கண் திறக்குமா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

இப்படியுமாகத் தம் அறையில் அவர்கள் நடைபோட்டுக் கொண்டிருந்தார்கள்.

“அழைத்தீர்களாமே?” என்றேன் நான்.

“கல்கி காரியாலத்தில் வேலைபார்க்கும் நீங்கள் வேறெந்தப் பத்திரிகைக்கும் கதையோ கட்டுரையோ எழுதக் கூடாது என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா?” என்று தமக்கே உரித்தான கம்பீரத்துடன் அவர்கள் கேட்டார்கள்.

“தெரியும்!” என்றேன் நான்.

“சரி, இந்தப் பத்திரிகையில் வெளியாகியிருக்கும் தொடர்கதை யாருடைய தொடர்கதை?”

“தெரியாது!”

“உங்களுடைய தொடர்கதை என்று பலர் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்களே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்?”

“அவர்கள் ஒரு வேளை என்னுடைய விரோதிகளாயிருக்கலாம்!”

“இல்லை; உங்களுடைய அபிமானிகள்தான் அப்படி எழுதியிருக்கிறார்கள். அத்துடன், ‘கல்கி‘’யில் ஏன் அவர் தொடர்கதை எழுதக்கூடாது என்றும் கேட்டிருக்கிறார்கள்.”

‘அவர்கள் நாசமாய்ப் போகட்டும்!’ என்று மனத்துக்குள் சபித்துக்கொண்டே நான் பலிபீடத்தில் நிற்கும் ஆடு போல் நின்றேன்.

அதற்குப் பின் ஆசிரியர் அவர்கள் என்ன நினைத்தார்களோ, என்னமோ, “சரி, போய் வாருங்கள்!” என்று என்னை அனுப்பிவிட்டார்கள்.

வீட்டுக்கல்ல; காரியாலயத்துக்குத்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/8&oldid=1379226" இலிருந்து மீள்விக்கப்பட்டது