பக்கம்:கண் திறக்குமா.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

77

எதிர்பார்க்கிறான் - இதெல்லாம் நியாயமாயிருக்கும் போது எங்கள் கட்சி மட்டும் எப்படி நியாயமற்றதாயிருக்க முடியும்? - பரம்பரை பரம்பரையாக வளர்ந்து வந்திருக்கும் இந்த ‘நாகரீகத்தை ஒழிக்க உன்னைப்போல் எத்தனை பேர் கிளம்பினாலும் முடியாதப்பா, முடியாது. ஆனால் ‘எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் இந்நாட்டு மன்னர்!’ என்ற வெறுங் கூச்சலை மட்டும் அதற்காக நாங்கள் கைவிட்டுவிட முடியாதுதான்!”

“அது ஏன் அப்படி?”

“இது என்ன கேள்வி? - அதுதானே என்னைப் போன்றவர்கள் பேரும் புகழும் பெறுவதற்குத் தாரக மந்திரமாயிருக்கிறது? - உண்மையான மதிப்பு; ஊரோடு மட்டுமின்றி உலகத்தோடும் ஒட்டிய மதிப்பு; ஒரு நாளும் அழியாத மதிப்பு; செத்தாலும் சாகாத மதிப்பு - யாராவது பெற வேண்டுமென்றால் அவர்களுக்கு அந்தக் கூச்சலை விட்டால் வேறு வழி? அதனால்தான் இந்த உடம்பில் உயிருள்ளவரை கட்சிக்காரர்களைக் கட்டிக் கொண்டு அழுது, அவர்களுக்காகத் தொண்டைத் தண்ணீர் வற்றக் கத்தி, கடைசியில் ஒருவருக்கும் தெரியாமல் செத்துப் போகும் அந்தப் பாரிஸ்டர் தொழிலுக்கு நான் முழுக்குப் போட்டுவிட்டேன்!”

“அப்படியானால் காந்திஜியின் கோர்ட்டுப் பகிஷ்காரத்தை விரும்பியோ, அதில் நாமும் கலந்துகொள்ள வேண்டியது நியாயம் என்று கருதியோ நீங்கள் தொழிலை விடவில்லையா?”

“உன்னிடம் நான் தான் உண்மையைச் சொல்கிறேனே, அந்த மனிதனின் திட்டங்கள் அனைத்தும் பரிபூரண வெற்றி அடைந்துவிடும் என்று நான் இன்றுகூட நினைக்கவில்லை. ஆனால் மக்களின் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய ஏதோ ஒரு சக்தி அவனுடைய பேச்சுக்குத் தற்சமயம் இருக்கிறது. அதன் மூலம் ஒருவேளை அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/80&oldid=1378706" இலிருந்து மீள்விக்கப்பட்டது