பக்கம்:கண் திறக்குமா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

கண் திறக்குமா?

அதற்குள், “அதனாலென்ன, இன்றிரவு இங்கே தங்கிவிட்டு நாளைக்கு வேண்டுமானால் அங்கே போனால் போச்சு!” என்றார் பரந்தாமன்.

“பாவம், எப்பொழுது சாப்பிட்டதோ என்னவோ? மணி எட்டு அடிக்கப் போகிறதே, முதலில் சாப்பாட்டைப் போட்டுவிட்டு அப்புறம் வேண்டுமானால் பேசக் கூடாதோ?” என்றாள் அவள்.

“இதைத்தான் பெண் உள்ளம் என்பது! - இத்தனை நேரம் நானும் உன்னுடன் பேசிக்கொண்டிருந்தேனே, இதுவரை நீ சாப்பிடவில்லை என்பது எனக்குத் தெரியவேயில்லை, பார்த்தாயா?” என்றார் பரந்தாமன். பதிலுக்குப் புன்னகை புரிந்துவிட்டு நான் பேசாமல் இருந்தேன்.

“சரி வாருங்கள் - சாப்பிடுவோம்!” என்றார் பரந்தாமன்.

“முதலில் ஸ்நானம்; பிறகுதான் சாப்பாடு!” என்றேன் நான்.

அதற்குப் பின் பரந்தாமனாருக்கு எந்தவிதமான சிரமமும் கொடுக்கவில்லை சாந்தினி; எல்லாச் சிரமங்களையும் தானே ஏற்றுக் கொண்டாள். அதன் பயனாக அவர் தொணதொணப்பிலிருந்து ஒருவாறு தப்பி, ஸ்நானம், சாப்பாடு ஆகியவற்றையெல்லாம் முடித்துக் கொண்டேன். “சரி, காலையில் பார்ப்போம் - போய்ப் படுத்துக்கொள்!” என்று எனக்கெனத் தனி அறையொன்றைக் காட்டி விட்டு, “எங்கே அவளைக் காணோம்?” என்று தம் இளையாளைத் தேடிக் கொண்டு சென்றார் முதியவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/85&oldid=1378730" இலிருந்து மீள்விக்கப்பட்டது