பக்கம்:கண் திறக்குமா.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

கண் திறக்குமா?

மணிக்கெல்லாம் ஜெனரல் ஆஸ்பத்திரியின் வாயிலுக்கு வந்து காத்திருக்கும்படி சொல்லியிருக்கிறாள்!” என்று அவன் உள்ளது உள்ளபடியே சொல்லியிருக்கலாம் - அவனுக்கென்ன, நிலைமை மோசமாகும்போது பரமசிவன் வந்து காட்சியளிப்பார் என்ற தைரியம் இருக்கும். அடியேனுக்கு அம்மாதிரி தைரியம் ஒன்றும் இல்லை யல்லவா? - எனவே; போனாற் போகிறதென்று ‘நரக’த்துக்கும் துணிந்து நான் ஒரு மகத்தான பொய்யை அவரிடம் சொன்னேன் - அதாவது, நண்பன் ஒருவனைப் பார்த்துவிட்டுப் போகப் போகிறேன் என்று!”

“அப்படியானால் சரி! - நான் இப்போது திலகர் குருகுலம் வரை போய்விட்டு வரலாமென்று இருக்கிறேன்; நீங்களும் வேண்டுமானால் வருகிறீர்களா?” என்றார் அவர்.

“மன்னியுங்கள்; இன்னொரு சமயம் பார்த்துக் கொள்ளலாம்!” என்றேன் நான்.

அவர் போய்விட்டார்; நான் படுக்கையில் சாய்ந்தேன் என் மனம் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தது - என்னுடைய இருண்ட வாழ்க்கை ஒளி பெறுவதற்காக அன்பெனும் விளக்கை ஏற்றி எடுத்துக்கொண்டு வருகிறாள் சாந்தினி. அர்த்தமற்ற சமுதாயக் கட்டுப் பாட்டுக்கு முன்னால் அந்த உத்தமமான காரியத்தை அவள் உலகத்துக்குத் தெரியாமல் செய்ய வேண்டியிருக்கிறது. ஆகவே, அப்படியும் இப்படியுமாகத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே அவள் பதுங்கிப் பதுங்கி வருகிறாள். பயத்தால் அவளுடைய விழிகள் அப்படியும் இப்படியுமாகப் பாய்ந்து பாய்ந்து சென்று மீள்கின்றன. அதைப் பார்க்கும்போது, ‘அந்தப் பயம் அவளை விட்டு என்றும் நீங்காமல் இருக்கட்டும்!’ என்று எனக்கு வாழ்த்தத் தோன்றுகிறது - ஆம்; அந்த அழகிலே நான் அவ்வளவு தூரம் சொக்கி விடுகிறேன்! - அவளுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/95&oldid=1378776" இலிருந்து மீள்விக்கப்பட்டது