பக்கம்:கண் திறக்குமா.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

93

தளிர்க்கரங்களின் ஒன்றிலே அந்த விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது; இன்னொரு கரமோ புடவைத் தலைப்பை இழுத்து அந்த விளக்குக்கு முன்னால் பிடித்துக் கொண்டிருக்கிறது - ஏன்? - அந்த விளக்கைச் சமூக மென்னும் சூறைக் காற்றிலிருந்து காப்பாற்றவா? - அப்படியானால் அவளுடைய எண்ணம் ஈடேற வேண்டுமே!

எப்படி ஈடேறும்? - ஒருவேளை பெற்றோர் அந்த விளக்கைப் பிடுங்கிக் கீழே எறிந்துவிட்டால்? - பெரியோர் ஓடோடியும் வந்து அதை ஊதி அணைத்து விட்டால்?

ஐயோ, அதற்குப் பின் என்னுடைய வாழ்க்கை! - என்றும் இருண்ட வாழ்க்கையாகவே இருந்துவிட வேண்டியதுதானா?

‘பொய் சொல்வது பாவம்’ என்று உலகம் பயமுறுத்துகிறது - ஆனால், அதே உலகம் உண்மையைச் சொல்லிக் காதலை வளர்க்க எங்களை அனுமதிக்கிறதா?

எனவே, காதல் வசப்பட்டுவிட்ட நாங்கள் எடுத்ததற்கெல்லாம் பொய் சொல்கிறோம் - ஏன், எங்கள் காதல் வளர்வதற்காக; அந்தக் காதலில் நாங்கள் ஒருவரை யொருவர் உள்ளது உள்ளபடி அறிந்து உயிர் வாழ்வதற்காக!

இதைக் குற்றம் என்று சொல்லும் உலகம், ‘நீங்கள் வாழ வேண்டாம்; செத்துப் போங்கள்!’ என்றாவது சொல்லித் தொலையட்டுமே!

இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டிருந்த போது சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரம் ‘டாண் டாண், டாண்’ என்று ஒலித்து மணி மூன்று என்பதை எனக்கு அறிவித்தது - அவ்வளவுதான்; அவசர அவசரமாக எழுந்து முகத்தை அலம்பிக் கொண்டு ஆஸ்பத்திரியை நோக்கி நடந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/96&oldid=1378778" இலிருந்து மீள்விக்கப்பட்டது