பக்கம்:கதாநாயகி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடிந்தது ஞாயிற்றுக்கிழமைப் பொழுது. தளர்ந்து வந்த கோடையின் புலரியில் துயிலெழுந்து, பல்துலக்கிக் காப்பி சாப்பிட்டுவிட்டு, அந்தச் சூட்டோடு காலைச் செய்திகளையும் நெஞ்சிலேற்றிக் கொண்டு, குளித்து, புத்துடை தரித்துப் புறப்பட்டான் அம்பலத்தரசன். பக்தி சிரத்தையுடன் காளிகாம்பிகை காமடேஸ்வரர் தரிசனத்தை முடித்தான். எங்கள் வாழ்வை நலத்துடன் அமைத்துக் கொடுங்கள் என்று ஜோடித் தெய்வத்தைப் பிரார்த்தித்துக் கொண்டான். தானும் ஊர்வசியும் தொடங்கவிருக்கின்ற அந்தப் புதுமண வாழ்வின் தாம்பத்தியம் சிறக்க வேண்டுமென்ற தவிப்புடன் அஞ்சலி செலுத்தி, அந்த அஞ்சலியில் தன் பிரார்த்தனை ஈடேறி விடுமென்ற தன்னம்பிக்கையைப் பெற்றுத் திரும்பி நடந்தான். புதிதாக உருவாகி வளர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த உறவும் பாசமும், துடிப்பும் கடமையும் அவனைப் புதுப்புதுப் புவனத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தன. வாழ்க்கையின் பால் அவனுக்கு இருந்த ஆர்வமும் கவலையும் அவன் மனத்தைப் பண்படுத்திப் பக்குவப்படுத்திக் கொண்டிருந்தன. முதற் பிரார்த்தனைக்குரிய மணி, அருகிலிருந்த புனித மேரி மாதா கோவிலிலிருந்து ஒலித்தது. அம்பலத்தரசன் இடது புறமாக திரும்பினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/110&oldid=765986" இலிருந்து மீள்விக்கப்பட்டது