பக்கம்:கதாநாயகி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்*105



செய்துவிட்டது. மறுவினாடியே, அவன் தன்னைச் சமாளித்துக் கொண்டான். 'பிரச்னைகளுக்கு முன்னேதானே மனிதன் அக்கினிப் பிரவேசம் செய்ய வேண்டியிருக்கிறது. அப்போதுதானே வாழ்க்கை எனும் வேள்வித் தீக்கும் மகிமை இருக்க முடியும்! வாழ்வின் மாயத்தாகம் அப்போதுதான் பொருள்கொண்டு விளங்கவும் முடியும்!... என்றென்றும் ஊர்வசி என் ஊர்வசி என் நம்பிக்கையின் ஜீவனாகவே பொலிவாள்! நானும் என் ஊர்வசியின் நம்பிக்கையாக என்றென்றும் விளங்குவேன்! என்வரை, அவள் கற்பின் செல்விதான்! அவளுக்குக் கற்பில் இருக்கும் நம்பிக்கையும் வாழ்க்கையில் இருக்கும் பற்றும் யாருக்கு வரும்? அவள் - என் ஊர்வசி ஒர் அபூர்வம்!'

உடலைச் சிலுப்பிக் கொண்டு அம்பலத்தரசன் இடம் மாறி உட்கார்ந்தான்.

பால் காய்ந்தால், சுவைகூடும்.

சோதனை கூடினால், மனம் பக்குவமடையும்!

எண்ணத்தின் சூடு, அவனுள் சுவையான ஒர் ஆரோக்கியத்தைப் பரப்பிவிட்டது போலும்!

ஒரேயொரு சிகரெட் தலையை நீட்டி அவனைச் சோதித்தது. நாக்கு ஊறியது. அதைக் கையில் எடுத்தான். ஒருமுறை அதை அருவருப்புடன் பார்த்தான்; அடுத்த கணம், அந்தச் சிகரெட்டைக் கசக்கி விட்டெறிந்தான்!

தத்தளிப்பு மாற, தத்தளிப்பை மாற்ற, பூ இதழின் மலரொன்றைப் புரட்டினான். 'புரட்சிக்கு மறுபெயர் காதல்!' என்ற மகுடம் அவனை வசீகரித்தது. 'காதல் என்றால் என்ன? ஒன்றுபட்ட மனங்களின் என்றென்றும் நிலைத்து நிற்கும் மனங்களின் அன்புப் பரிவர்த்தனைதானே காதல் என்பது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/115&oldid=1319036" இலிருந்து மீள்விக்கப்பட்டது