பக்கம்:கதாநாயகி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் ❖ 109


நினைவால் எழுதி ரசித்தவனாக, அறையில் பிரவேசித்த உன்னத நிலையையும் அவன் மறந்துவிட முடியாது.

ஆகவே, அவன் ஊர்வசியின் சிந்தூரப் பாதங்களை எதிர் நோக்கிக் காத்திருந்தான்.

பூப்பொட்டலம் மேஜையின் நடுவில் மணத்தது.

அவன் மனக் கண்ணில் ஊர்வசியின் பூச்சூடிய கூந்தல் அழகு காட்டியது!

"ஸார்!" என்ற புதிய குரல் கேட்டது.

அறிமுகமில்லாத ஒருவரும், பெண் ஒருத்தியும் குழந்தையோடு வந்து நின்றதைக் கண்டான் அம்பலத்தரசன். அவர்களுக்கு முகமன் மொழிந்தான். பாயை விரித்தான்.

"நீங்கதானே மிஸ்டர் அம்பலத்தரசன்?"

"ஆமாங்க!"

"உங்களைச் சும்மா பார்த்திட்டுப்போகத்தான் வந்தோம். என் பெயர் மகாலிங்கம், இவள் என் மனைவி. பெயர் மலர்விழி. இது எங்க குழந்தை. ஊர்வசிக்கு நேர்ந்த துர்ப்பாக்கியத்தைப் போல் இவளுக்கும் ஏற்பட்டு, இவள் என்னை அடைக்கலம் அடைஞ்சாள். இவளை ஏற்றுக்கிட்டேன். பெண்கள் அபலைகளாக ஆகும்போது, தங்களையும் மீறி இப்படிப்பட்ட துரதிஷ்டங்களைச் சந்திக்க நேரிடும்போது, இதயமுள்ள நம்மனிதர்கள் மாதிரி முன்வந்து அவங்களுக்குத் துணை நிற்க வேணும். இதுதான் படைப்புச் சக்தி உலகத்துக்கு இட்டிருக்கக்கூடிய கட்டளை. உங்க நல்லெண்ணத்தை ஊர்வசி குடியிருக்கிற அடுத்த போர்ஷன்காரர் என்கிட்டே சொன்னார். அதான் உங்களைப் பார்த்திட்டுப் போக வந்தோம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/119&oldid=1310033" இலிருந்து மீள்விக்கப்பட்டது