பக்கம்:கதாநாயகி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பூவை எஸ். ஆறுமுகம் ❖ 3


காற்று சுகமாத் தவழ்ந்தது.

சென்னைப்பட்டிணம் அதற்குள் அடங்கிவிட்டதே!......

அமைதி படிந்து, படர்ந்திருந்த நேரம்.

ஆம்; அழகு தவக்கோலம் பூண்டிருந்த வேளை அல்லவா?

தறிகெட்டுச் சுழன்ற அவனது உள்ளம், இயற்கையின் மோகனக் கவர்ச்சியில் முழுமையாக ஒட்ட மறுத்தது. திரும்ப திரும்ப, நாடக நாயகிதான் அவன் இதய அரங்கத்தில் தோன்றி சுழன்றுகொண்டிருந்தாள். ஊர்வசி எத்துணை இயற்கையாக நடித்தாள்! கதைத் தலைவி சுந்தரியாகவே மாறிவிட்டாளே?......

பரிதாபத்துக்குரிய பெண் அவள் கதையில்! அனுதாபத்துக்குரிய பெண் அவள், நாடகத்தில்! அவன் மனம் தனக்குத்தானே பேசிக்கொண்டது.

பேச்சின் ஒலியும் எதிரொலியும் தடம் தேய்வதற்குள், அவனுக்கு அன்று காலை வந்த தன் அன்னையின் கடிதம் நினைவுக்கு வந்துவிட்டது. ஏதேதோ சிந்தனை விரிசலுடன் ஓர் அரைக்கணம் அவன் தவயோகியின் நிலையில் கண்மூடி நின்றான். நிலவின் சீதளத்தை அவனால் நன்கு உணர முடிந்தது நிலவின் சீதனத்தையும் தான்!

டெலிபோன் மணி கண கண வென்று சத்தமிட்டது. தவம் கலையப் பெற்றுப் பரிதவிப்புடன், கண்களைத் திறந்தான். அம்பலத்தரசன் இமைகள் படபடத்தன.

மணி பத்து இருபது, என்று சொன்ன கைக் கடிகாரத்துக்கு மானசீகமாக நன்றி சொல்லிவிட்டு, அழைத்த தொலைபேசியை நாடி விரைந்தான் “அம்பலத்தரசன். “அம்பலத்தரசன் ஸ்பீக்கிங் ஹியர்.....ஓ.....! ‘பூ’ காரியாலங்களா? சந்தோஷம்...... ட்ராமா ரெவ்யூதானே?.... எழுதி முடிச்சிட்டேனே! ஒரு க்ளான்ஸ், பார்த்திட்டுக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/13&oldid=1320985" இலிருந்து மீள்விக்கப்பட்டது