பக்கம்:கதாநாயகி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126❖கதாநாயகி


அம்பலத்தரசனைத் தொடர்ந்தான் பூமிநாதன். அவன் கால்கள் இடறின.

அண்டை அயலிலிருந்து பெண்டுகள் சிலர் இவர்கள் மூவரையும் கள்ளத்தனமாகப் பார்த்துக் கள்ளத்தனமாகக் சிரித்துக் கொண்டிருந்தார்கள். எப்படிச் சிரித்தார்கள் தெரியுமா? பைத்தியங்கள் மாதிரி! பைத்தியங்களுக்கும் சுயநலம் விலக்கல்லவே!

மூன்று ஜோடி நடையன்கள் வாசலுக்குக் காவல்.

கூடத்திற்குள் அவசரமாக அடியெடுத்து வைத்து, அவசரத்தோடு பாயை எடுத்து உதறி விரித்தாள் ஊர்வசி; மேலாக்குச் சரிந்து விழுந்து விடாமல் காத்துக் கொண்டாள். "உட்காருங்க ரெண்டு பேரும்" என்று உபசாரம் செய்தாள். சொற்களில் பதட்டம் இருந்தது. கண்களின் கரு மணிகளில் ஈரம் இருந்தது.

அம்பலத்தரசனும் பூமிநாதனும் பாயில் உட்கார்ந்தார்கள்.

அவர்கள் இருவரையும் பார்த்து, "ஒரு நிமிஷம் இருங்க; இதோ, வந்திட்றேன்," என்று சொல்லி விட்டு சமையற்கட்டுக்குச் சென்றாள்.

வினாடிகள் சிலவற்றை ஊமைக்கனவோடு விழுங்கியது மெளனம்.

"நீங்க இங்கே இதுக்கு முன்னாடி வந்திருக்கீங்களா?" என்று மெளனத்தை வெட்டினான் பூமிநாதன். வீசிக்கொண்டிருந்த வேப்பமரக் காற்றையும் மீறி, அவன் முகத்தில் வேர்வை துளிர்த்தவாறு இருந்தது. துடைத்துக் கொள்ளச்சளைக்கவில்லை அவன் கைககள்.

"என்னைக் கேட்கிறீங்களா? நான் இரண்டொருவாட்டி இங்கே வந்திருக்கேன், மிஸ்டர் பூமிநாதன்!...நீங்க....?" என்று அவனும் பதிலுக்கு ஒரு கேள்வியைத் தொடுத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/136&oldid=1307681" இலிருந்து மீள்விக்கப்பட்டது