பக்கம்:கதாநாயகி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் ❖ 131


தேடித்தான் வந்தேன். அதுக்குண்டான பக்குவம் இண்ணிக்கிக் காலம்பறத்தான் எனக்கு வந்திச்சு என்பாவத்தைச் சொல்லி அழத்தான் நண்பரை நாடினேன். வழியிலே நண்பர் அறையிலே நாம் சந்திச்சோம். ஊர்வசி!... நீங்க... நீ... விரும்புகிற தண்டனையைக் கொடு!... என் நெஞ்சு வெடிச்சிச் சிதறுறதுக்கு முன்னாடி, உன் தண்டனையை எனக்குக் கொடுத்திடு!... அந்தத் தண்டனை இந்தத் துரோகியை பாவியை மிருகத்தைக் கடைத்தேறச் செய்யட்டும்!.." என்று ஓங்காரமிட்டுக் கதறிய வண்ணம் மறுபடியும் ஊர்வசியின் பாதங்களில் சிரம்பதித்துக் கூக்குரலிட்டு அழுதான் பூமிநாதன், அவன் நினைவு சிறுகச் சிறுக மாறிக் கொண்டிருந்தது!

வெஞ்சினம் மூள, எச்சில் கையுடன் எழுந்தான் அம்பலத்தரசன்.

அவனை முந்திக் கொண்டு, ஊர்வசியின் அன்னை பூமிநாதனின் தலை முடியை வெறி மூளப் பற்றினாள். பாழ்நெற்றியில் பழிவாங்கும் வைராக்கியம் தவம் இருந்தது.

அன்னையைத் தடுத்தாள் புதல்வி.

பூமிநாதனின் கன்னங்களில் அறையக் கையை ஓங்கிய அம்பலத்தரசனையும் கரம்பற்றித் தடுத்தாள் ஊர்வசி.

"தெய்வம் விளையாடுதுங்க, அத்தான்!. தர்மம் விளையாடுதுங்க, அம்மா!... நீங்க ரெண்டு பேரும் அமைதியாயிருங்க!.. கையெடுத்துக் கும்பிடுறேன்!" என்று நைந்தகுரலெடுத்துப் பேசிவிட்டு, தன்னை மறந்து, விம்மி வெடித்துக் கொண்டிருந்தாள் ஊர்வசி, அவள் வடித்த விழிவெள்ளம் பூமிநாதனின் தலையில் வழிந்து கொண்டேயிருந்தது.

கணங்கள், பேய்க்கணங்களாக ஊர்ந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/141&oldid=1333007" இலிருந்து மீள்விக்கப்பட்டது