பக்கம்:கதாநாயகி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132❖கதாநாயகி


அம்பலத்தரசனும் மீனாட்சி அம்மாளும் சிலையாக நின்றனர்.

சுயப்பிரக்ஞை கொண்டாள் ஊர்வசி; வழிந்த கண்ணீர் வழிந்தோட, பூமிநாதனை நோக்கினாள்.

பூமிநாதன் சுயப்பிரக்ஞை தப்பிக்கிடந்தான்.

ஊர்வசி, அவன் முன்னே குனிந்து உட்கார்ந்தாள். சரிந்து விழுந்தது மாரகச்சேலை. எடுத்துப்போட்டுக் கொண்டாள். பூமிநாதனைத் தொட்டுத் தலையைத் தூக்கினாள். அப்போது அவனுடைய சட்டைப்பையிலிருந்த ஒர் அழகான தங்கத்தாலியும் ஏழெட்டு தூக்க மாத்திரைகளும் நழுவின!... அவனை மீண்டும் பார்த்தாள். அவன் இன்னமும் தன்னினைவு கொள்ளக் காணோம்! பூமிநாதன்! மிஸ்டர் பூமிநாதன்!..." என்று பலத்த குரலெடுத்துக் கூப்பிட்டாள். இதழ்கரையில் உவப்பு நீர் கரைந்தது.

பூமிநாதன் கண்களை விலக்கினான். விரிந்த விழிகள், ஊர்வசியை வெறிக்கப் பார்த்தன. அப்பார்வையில் பரிதாபம் கோலோச்சியது. நோக்கு இறங்கியது. கீழே கிடந்த அந்தத் தாலியையும் அந்தத் தூக்கமாத்திரைகளையும் அவன் கையிலெடுத்தான்! கண்ணிர் வெள்ளம் திரும்பவும் மடை திறந்தது. "ஊர்வசி! இந்தத் தாலியை உனக்கென்று கொண்டாந்திருக்கேன் நான். இந்த முடிவுக்கு பிராயச்சித்தத்துக்கு நீ சம்மதிச்சு எனக்கு வாழ்வு கொடு. உன்னோட முடிவு என்னைக் கடைத்தேற்றும் இல்லைன்னா. இதோ, இந்தத் தூக்க மாத்திரைகள் எனக்கு நல்ல முடிவு காட்டக் காத்திருக்கும்!..." என்று தேம்பலானான் அவன்.

ஊர்வசி எழுந்து நின்றாள். "தூக்க மாத்திரைகள் எல்லாத்தையும் இப்படி என்கிட்டே கொடுங்க, மிஸ்டர் பூமிநாதன்!"என்றாள் அவள். நா தழுதழுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/142&oldid=1307450" இலிருந்து மீள்விக்கப்பட்டது