பக்கம்:கதாநாயகி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



8 ❖ கதாநாயகி


அவன் திரும்பினான். “என்னைத் தயவு செய்து மன்னிச்சிடுங்க, வந்த உங்களை உட்காரச் சொல்லக்கூட ஞாபகமின்றி, பேசிக்கிட்டிருந்துட்டேன். உட்காருங்க. இதோ ஒரு நொடியிலே பாரிஸ் கார்னர் வரை போய்த் திரும்பிடுறேன், மிஸ். ஊர்வசி!...”

ஊர்வசி சலனத்தின் பிசிறு எதுவும் தடம் காட்டாத ஒரு பார்வையை நம்பிக்கையோடு அவன் பேரில் வீசிவிட்டுப் புத்துணர்வுடன் மூரல் சிந்தினாள். “ஆல்ரைட்! யூ மே டேக் யுவர் ஓன் டைம்” என்று விடை அளித்துவிட்டு, கூடை நாற்காலியில் வெகுசுவாதீனத்தோடு குந்தினாள் ஊர்வசி. பூக்கள் மலர்ந்து சிரித்த மாம்பழ வர்ண நைலக்ஸ் புடவையைச் சீர்படுத்திக் கொண்டாள்.

அவளை நோக்கி, அதிசயப்பட்ட நிலையில் மீளவும் பார்த்து விட்டு, விமரிசனத்தாள்களோடு, அங்கிருந்து கிளம்பினான் அம்பலத்தரசன். “ஊர்வசி, கதவை நன்றாகத் தாளிட்டுக்கங்க!” என்று எச்சரித்தான் அவன். சுருட்டை மயிர்கள் சில நெற்றித் திட்டில் தட்டின்றிப் புரண்டன.

“கதவு திறந்தே கிடக்கட்டுங்க. நீங்க நிம்மதியாய்ப் போய்த் திரும்புங்க. நான் உங்க ரூமுக்கு காவல் இருப்பேன். நாணயத்தோடு,” என்றாள். ஓர் உறுதிப்பாடு மிளிர்ந்தது பேச்சில். கழுத்துச் சங்கிலி மார்பிடைப் பதிந்திருந்தது. தீப்பெட்டி கிடைத்துவிட்டது.

இதழ்க்கங்கில் நகை மிளிர, அந்நகை இணைப்பில் சிகரெட்டுப் புகை இழைய, அங்கிருந்து புறப்பட்டான் அம்பலத்தரசன்.

முத்துமாரிச் செட்டித் தெரு வழிவிட்டது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/18&oldid=1320991" இலிருந்து மீள்விக்கப்பட்டது