பக்கம்:கதாநாயகி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் ❖ 39


சிதறி வந்து தரையில் நழுவியது. பார்த்தாள். அது ஒர் அழகியின் படம்! பார்த்துவிட்டு, அதைப் பெட்டியில் வைத்தாள். பின்னர் அவள் மறுபடியும் துழாவினாள்.

"ஊர்வசி, நீ தேடுறது அங்கே இல்லை. பனியனும் அண்டர்வேரும் அடுத்த அறையில் இருக்கு" என்று சொல்லிக் கொண்டே அவன் நகர்ந்து திரும்பினான். அவனோடு சலவை வேட்டியும் சென்றது. மீண்டான். தும்பைப் பூவாகப் பளிச்சிட்டது வேஷ்டி.

"தலைவாரிக்கங்க!" என்று கூறி 'காந்தரால் ஹேர் ஆயில்' புட்டியைக் கழற்றி வைத்தாள்.

"ஒரு நிமிஷம்," என்று சொல்லிவிட்டு, அறைக்கு வெளியேவந்தான். உதயசூரியனின் திசைநோக்கிக் கரங்கூப்பிக் கைதொழுதான். ஒரு நிமிஷம் அல்ல, ஒன்பது நிமிஷங்கள் வரை அவன் பிரார்த்தனை செய்தான். பிறகு திரும்பி வந்தான். தலைவாரிக் கொண்டான். ஆமாம், தலை முடியைத் தான் வாரிக்கொண்டான். சுருட்டை முடிகளில் அற்புதமான வாசம் கமழ்ந்தது.

"நான் கூட இந்த ஆயில்தான் உபயோகிப்பேன்."

"ஓஹோ!" என்று சொல்லி, விபூதி மடலிலிருந்து ஒரு துளியை நகக்கண் கொண்டு எடுத்துப் பூசிக் கொண்டான்.

"நீ விபூதி பூசிக்கொள்றதுதானே?"

"ஆஹா!...."

திருநீறு ஏந்தப் பூங்கரம் நீட்டினாள் ஏந்திழை.

ஆனால் அதற்கு வேலையின்றி, அவனே அவளுக்குப் பூசிவிட்டான். "நம்ம ரெண்டு பேருக்கும் இந்தத் திருநீறும் தெய்வமும்தான் இனிக்காப்பு" என்று உணர்ச்சிப் பெருக்குடன் உரைத்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/49&oldid=1333012" இலிருந்து மீள்விக்கப்பட்டது