பக்கம்:கதாநாயகி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48*கதாநாயகி


சுலபம்தானம்மா! ஆனா, அப்படி நான் செத்திட்டாமாத்திரம், எனக்கு உண்டான அவப்பேரும், களங்கமும் மறைஞ்சிடுமாம்மா? இதுக்கு விடை சொல்லிடு! இப்பவே போய் நான் கடலிலே விழுந்து செத்துப் போயிடுறேன். ஆண்டவன் அதுக்கு உண்டான தைரியத்தைக் கொடுத்திருக்கான்! உன்னோட அன்பும் கண்டிப்பும், அதுக்கு உண்டான மனசைக் கொடுத்திருக்கு! சொல்லம்மா சொல்லு!" என்று விரக்தியின் அழுத்தத்தோடு நெஞ்சுரத்தின் வலுவோடு நேர்மைத் திறனில் தனக்குள்ள ஈடுபாட்டின் துணையோடு அவள் வினா விடுத்தாள்.

அவள்: ஊர்வசி!...

காலடியில் கிடந்த அருமைப் புதல்வி, நெஞ்சடியில் வீசிய கேள்விக்கு இன்ன பதில் சொல்வது என்று பட்டும்படாமல் விழித்தாள் தாய். தாய்ப்பாசம் ரத்தக் கண்ணீரை வடித்தது. குனிந்து மகளை ஏந்தித் தூக்கினாள் பெற்றவள். தூக்கின சடுதியில், மீனாட்சி அம்மாளின் தளர்ந்த கைகள் ஊர்வசியின் நெஞ்சில் அழுந்திவிட்டன போலும்!

ஊர்வசி துடியாய்த் துடித்துப்போனாள். அவள் தன் மார்பகத்தை மேலாகத் தடவிவிட்டுக் கொண்டாள்.

"இப்போ என்னை என்னம்மா செய்யச் சொல்லுறே நீ?" என்று வேதனையின் உச்சத்தில் நின்று கேட்டாள் ஊர்வசி.

"நீ இப்போ என்ன சொல்லச் சொல்லுறே என்னை? அதைச் சொல்லு முதலிலே!" என்று கெஞ்சினாள் அன்னை.

"நீ செத்திடாமல் இருந்தால், அதுவே போதுமம்மா" என்று இறைஞ்சினாள் மகள்.

"நீயும் செத்திடாதேம்மா!" என்று விம்மினாள் தாய் அம்மகளை ஈன்ற மாதா.

“சரியம்மா!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/58&oldid=1319068" இலிருந்து மீள்விக்கப்பட்டது