பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தித்து விடலாம் என்று நினைத்துப் பூரிப்படைந் தார்.

பாடகர் ஆண்டர்சனுக்குத் தினமும் சங்கீதம் கற்றுக் கொடுத்து வந்தார். ஆண்டர்சனும் கருத்தாய்க் கற்றுக் கொண்டார். ஆயினும், ஆண்டர்சனின் துர்அதிர்ஷ்டம் அங்கே அதிக நாள் இருக்க முடியவில்லை. காரணம், அவருடைய குரல் பதினைந்தாவது வயதில் மாறி விட்டது. அதில் இனிமை இல்லை. கேட்கவே சகிக்கவில்லை. “இனி நீ இங்கே இருப்பதில் பயனில்லை. பேசாமல் ஊருக் குத் திரும்பிப் போய்விடு” என்று அந்தப் பாடகர் புத்திமதி கூறினர்.

ஆண்டர்சனுக்கு ஊருக்குத் திரும்ப மனமில்லை. ஆனாலும், பாடகருடைய வீட்டைவிட்டு வெளியேறி விட்டார்.

“இனி, நம்மால் நடிகனாகவே முடியாதோ..? சரி..போகட்டும்... ஆனாலும், நான் சும்மா இருக்கப் போவதில்லை. பெரிய நாடகாசிரியனாக, சிறந்த கவிஞனாக வேண்டும்” என்று முடிவு செய்தார் ஆண்டர்சன்.

சிறு வயதிலே பொம்மை நாடக மேடையில் பொம்மை நடிகர்களே நிற்க வைத்து, அவர்களுக்காக வசனமும், பாட்டும் எழுதியதை நினைத்துக் கொண்டார். அந்த அனுபவம் அவருக்குப் பெரிதும் உதவியது. நாடகங்களும், பாடல்களும் எழுதத் தொடங்கினர். அவற்றை விலைகூறிப்

17