பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

நான் ஒருவர் வீட்டுக்குச் சென்றேன். அவர்கள் எனக்குக் குடிக்கப் பால் தந்தார்கள். அதைக் கொஞ்சம் சாப்பிட்டபோது தித்திப்புத் தெரியவில்லை. "சர்க்கரை போடவில்லையோ?” என்று கேட்டேன். “சர்க்கரை அடியில் இருக்கும். கலந்திருக்காது; கலந்து சாப்பிடுங்கள்" என்றார் அவ்வீட்டுக்காரர். சர்க்கரையைப் பாலிலே கலக்கும்படி செய்து சாப்பிடும்போது பால் இனிக்கிறது. சர்க்கரை தன் உருவம் தோற்றாமல் பாலிலே கலந்துவிட வேண்டும். சர்க்கரை வேறு, பால் வேறாக இருந்தால் பால் இனிக்காது. சர்க்கரை கரைந்து பாலிலே ஒன்றிக் கலந்து விட்டால், பால் இனிக்கிறது போல, தம்மை மறந்து, பாட்டு மயமாகக் கலந்து யார் பாடுகிறார்களோ அவர்களுக்கு அந்தப் பாட்டு இனிக்கும். "நான் கலந்து பாடுங்கால்” என்று இராமலிங்கர் சொல்வதை ஊன்றிக் கவனிக்க வேண்டும்.

நாம் அயில்வேலன் கவியில் கலந்து நம்மை மறந்து அன்போடு பிழையறக் கற்றுப் பாடினால் யமதர்ம ராஜனையே வெல்லலாம் என்று அருணகிரிநாதர் புலப்படுத்துகிறார். அவர் சொல்லும் பாட்டு எதிர்மறை வாய்பாட்டில் இருக்கிறது.

“அவனுடைய பாட்டை நீங்கள் அன்பாலே பாடவில்லை. எழுத்துப் பிறையறக் கற்கவில்லை. எரிமூண்டதென்னப் பொங்கு வெங்கூற்றன் தன் பாசக் கயிற்றால் கழுத்தில் சுருக்கிட்டு இழுப்பானே, அப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் அந்தச் சமயத்தில் கவி கற்றுக் கொள்ளலாம் என்று இருப்பீர்களானால் பயன் இல்லையே!" என்று கேட்கும் கேள்வியாக அது இருக்கிறது.

பாதுகாப்பு

ருணகிரிநாதர் ஒர் இன்ஷஅரன்ஸ் ஏஜண்டு. "ஐயா இப்போதே இன்ஷூரன்ஸ் பண்ணிக்கொண்டு விடுங்கள். நீங்கள் திடீரென்று செத்துப் போனால் என்ன ஆவது? உங்கள் குடும்பம் போகும் கதி என்ன?" என்று நம்மிடம் வந்து கேட்கிறார்களே, இன்ஷூரன்ஸ் ஏஜெண்டுகள், அந்த முறையில் சொல்கிறார். உயிருக்குப் பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டுமென்பதை அவர் நினைவூட்டுகிறார்.

96