பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

குளத்திற்குள் அமிழும்போது அவன் தலையை வெளியே தூக்க மாட்டாமல் நீருக்குள்ளேயே அழுத்தினார். ஒரு நிமிஷத்திற்குப் பின் விட்டு விட்டார். அவன் மூச்சு விட முடியாமல் திணறித் துடித்துக் கொண்டு எழுந்தான். அவனைப் பார்த்து, "தண்ணிருக்குள் நீ என்ன நினைத்தாய்?" என்று கேட்டார். "எந்தச் சமயத்தில் வெளியே வருவேன், என்று எண்ணினேன்" என்றான் அவன். 'இப்படி ஆண்டவனை எந்தச் சமயத்தில் காணுவோம் என்று துடிதுடித்து நினைத்துப் பக்தி செய்தால் ஆண்டவன் அருள்வான்" என்று சொன்னார். அந்தத் துடிப்பை எப்படிப் பெறலாம்? மரணத்தினால் உண்டாகும் வேதனையை மனமார உணர்ந்தால் பெறலாம்.

எப்போது வருவான்?

நாம் யமன் வாயில்தான் தூங்குகிறோம். அவன் வாயிலுள்ள நம்மை அவன் எந்தச் சமயத்திலும் கொண்டு போய்விடுவான். அது இன்ன சமயம் என்று நமக்குத் தெரியாது. யமன் முன் எச்சரிக்கை அனுப்பி விட்டு வருகிற பேர்வழி அல்ல. அதனால் நாம் எப்போதுமே பாதுகாப்புடன் இருக்க வேண்டும். ஞானசம்பந்தர்,
   "நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யார் அறிவார்
   சாநாளும் வாழ்நாளும்?"
என்று நெஞ்சுக்கு உபதேசம் செய்கிறார்.

எந்த நாள் யமன் வருவானோ? யார் அறிவார்கள் சா நாளும், வாழ் நாளும் யார் அறிவார்கள்? தான் செத்துப் போகிற நாள் எது, வாழ்கின்ற நாள் எது என்று யாருக்காவது தெரியுமா? தெரியுமானால் அந்தச் சமயத்தில் ஆண்டவன் பேரைச் சொல்லலாம்.

ஒருவன் ஒர் ஊருக்குப் போகிறான். அந்த ஊர் போகும் வண்டி மணிக்குக் கிளம்புகிறது என்று ஒருவரைக் கேட்கிறான். அவர் பத்து மணிக்கு என்கிறார். மற்றொருவரைக் கேட்கிறான். அவர் பதினொரு மணிக்கு என்கிறார். இவன் ஒன்பது மணிக்கே ஸ்டேஷனில் போய் உட்கார்ந்து கொண்டு விடுகிறான். "எந்தச் சமயத்தில் வண்டி கிளம்பும் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. எதற்கும் முன்னாடியே போய்விட்டால் நல்லதென்று வந்து விட்டேன்?" என்று சொல்கிறான்.

100