பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1


   அழித்துப் பிறக்கவொட் டாஅயில்
     வேலன் கவியைஅன்பால்
   எழுத்துப் பிழையறக் கற்கின்றி
     லீர்எரி மூண்டதென்ன
   விழித்துப் புகையெழப் பொங்குவெங்
     கூற்றன் விடுங்கயிற்றால்
   கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன்
     றோகவி கற்கின்றதே?

(மீட்டும் பிறக்காமல் செய்யும் கூர்மையான வேலையுடைய முருகனைப் புகழும் கவியை அன்பினால் எழுத்துப் பிழைகள் இன்றிக் கற்காமல் இருக்கிறீர்களே கனல் மூண்டாற்போல விழித்து அதிலிருந்து புகை எழும்படியாகக் கோபத்தால் பொங்கும் கொடுமையுடைய யமன் தான் விடுகிற பாசக் கயிற்றால் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அந்த நாளிலா கவி கற்பது?

அழித்து - மீட்டும். அயில் - கூர்மை. கற்கின்றிலீர் - நீங்கள் கற்கவில்லையே. பொங்கு-கோபித்து எழும்.)