பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வேலின் பெருமை

1

ருணகிரி நாதர் முதலில் விநாயகரை நினைத்தார். பிறகு முதல் பாட்டிலே தாம் பெற்ற இன்பத்தைச் சொன்னார். "இறைவன் திருவருளினால் எந்த விதமான தகுதியும் இல்லாமல் இருந்த நான் பெரிய பேற்றைப் பெற்றேனே!" என்று இந்தச் சொற் கோயிலுக்குள் போகும்போதே, தாம் இருந்த நிலையை நினைவு கூர்ந்து, தாம் அடைந்த பேற்றைச் சொன்னார். தாம் மாத்திரம் இன்பம் பெற்றால் போதுமா? உலகமும் அந்த இன்பத்தைப் பெற வேண்டாமா? உலக மக்களும் அந்தப் பேரின்பத்தைப் பெறுவது எப்படி என உபதேசம் செய்ய வேண்டாமா? அந்த உபதேசத்தைச் செய்தார் இரண்டாவது பாடலிலே. "அயில்வேலன் கவியை எழுத்துப் பிழையறப் பாட வேண்டும், அதனால் யம பயம் இல்லாமல் போகும். அந்தக் கவியைக் கல்லாமல் இருக்கிறீர்களே, நாளைக்குக் காலன் வரும்போது என்ன செய்வீர்கள்?" என்று இரங்கினார்.

அயில்வேலன் கவியைக் கற்கச் சொல்கிறாரே; அவன் எத் தகையவன்? என்ன பெருமை உடையவன்? அவன் கையிலுள்ள அயில் வேலுக்கு என்ன பெருமை? சாதிக்க முடியாத காரியம் எதையாவது அது முன்பே செய்திருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு அருணகிரி நாதர் மூன்றாவது பாட்டிலே விடை சொல்கிறார்.

உலகம் எல்லாம் ஒப்புக் கொள்ளும்படி, அவன் புகழைப் பெரியோர்கள் கவியில் சாசனம் செய்திருக்கிறார்கள். கந்த புராணம் என்ற பெரிய நூலில் முன்பே அவன் புகழ் பரந்து சொல்லப் பெற்றிருக்கிறது. முருகனுடைய அவதாரத்திற்கு வியாஜம் சூரனைச் சங்கரிப்பது. அந்தக் சூர சங்காரம் செய்ததே அவன் திருக்கரத்திலுள்ள வேல்தான். அதை இப்போது சொல்கிறார்.